பாட்ஷா எங்கே?- : சர்ச்சை போஸ்டர்கள்!
பாட்ஷா எங்கே என நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேசியதுடன் ”இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட பாதிப்பு இல்லை” என தெரிவித்திருந்தார். மேலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக சென்னையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையிலும், டெல்லியில் மிகப் பெரும் வன்முறையும் நடந்தபோது இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் வீடு மற்றும் கடைகள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்நிலையில் ”இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என கூறிய ரஜினி பாட்ஷா ரஜினி எங்கே” எனும் சுவரொட்டிகள் நடிகர் ரஜினிகாந்த் இல்லம் செல்லும் வழி மற்றும் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
இதுவரை சமூக வலைத்தளங்களில் மட்டுமே ரஜினி எங்கே என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுவரொட்டி மூலமாக அதுவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ”பாட்ஷா எங்கே?” எனும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை வீரன் ஆதம்பாவா நற்பணி இயக்கத்தினர் இந்த சுவரொட்டியை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.