நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்… நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் ?
தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவரங்கள், அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் கோட்டம், செந்துறை தாலுகாவில் கிளிமங்கலம் -பாளையக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் நிர் வழிப்பாதை அரசு புறம்போக்கு இடத்தை அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் கோவிந்தசாமி, கோவிந்தசாமி மகன் அன்பழகன், கோவிந்தசாமி மகன் முருகானந்தம் ஆகியோருடன் சிலர் கூட்டாக சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு எரு, உரங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. கால்நடைகள் மேய்ச்சலுக்குச் செல்ல முடியவில்லை. விளைநிலங்களை உழவு செய்வதற்கு டிராக்டர்கள் செல்ல முடியவில்லை. காலங்காலமாக பொதுமக்களும், விவசாயிகளும் இந்த வழியாகத்தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால் மேற்கூறிய நபர்களின் ஆக்கிரமிப்புகளால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளோம் என்று பொதுமக்கள் சார்பாக செல்லம்மாள் என்பவர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த மனுவில் ஏற்கனவே அரியலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள், தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரிடத்தில் மனு கொடுத்ததின் பேரில் கடந்த 2021 அக்டோபர் மாதம் செந்துறை வட்டாட்சியர், பாளையக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சர்வேயர்கள் கூட்டு புல தணிக்கை செய்து அளவீடு செய்தார்கள். அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று மேற்படி நபர்களிடம் அளவீடு செய்து நடப்பட்ட சர்வே கற்களை பிடுங்கக்கூடாது என எச்சரித்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முழுமையாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில், செந்துறை வட்டாட்சியரின் உத்தரவை மீறி மீண்டும் மீண்டும் அந்த இடத்தை டிராக்டர் வைத்து உழுது பயிர் செய்து வருகின்றனர். பொதுமக்கள் காலங்காலமாக விளைநிலங்களுக்கு செல்லும் பாதையை மறித்து இடையூறு செய்து வருகின்றனர். மேலும் வட்டாட்சியர் நிலத்தை அளந்து ஊன்றிய சர்வே கற்களை பிடுங்கியும், உடைத்தும் எறிந்துள்ளனர். எனவே அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.
இந்த அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை அபகரித்த மேற்படி நபர்கள் ஏற்கனவே அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என எழுதி வாங்கியுள்ளார்களாம். ஆனால் அதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் இவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அதிகாரிகளே இவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்களா? என்ற சந்தேகம் பொதுமக்கள் அனைவருக்கும் எழுகிறது.
அரசு நீர்நிலை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தாவிட்டால் நாங்களும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு மனுக்கள் கொடுக்கவும் பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டெடுப்பார்களா..? காத்திருப்போம்.
– சூரியன்