கழிவறையிலும் கட்டண கொள்ளையா?
தமிழகத்திலேயே சிங்கப்பூருக்கு இணையாக வர்த்தக நகரமாக திகழும் மாநகரம் திருப்பூர் மாநகரம். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் தவிர தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பிழைப்பைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பேருந்துகளிலும் இரயில் மூலமும் திருப்பூர் நகரத்திற்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நடுத்தர ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.
வெளியூர்களில் இருந்து பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் தமிழக அரசு மாநகராட்சியின் மூலம் இலவச குடிநீர் குறைந்த கட்டணத்தில் கட்டண கழிப்பறை மற்றும் குளியல் அறை போன்ற வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அரசின் செலவில் கட்டிடங்களை கட்டி இந்த கட்டிடங்களை பராமரிக்க மாநகராட்சி தனியாருக்கு டெண்டர் கொடுத்திருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கட்டண கழிப்பறைகளை டெண்டர் விடும்போது பொதுமக்களிடம் குறைந்த கட்டணம் அதாவது குளிப்பதற்கு ரூ 2 (இரண்டு ரூபாய்) யும், சிறுநீர் மலம் கழிக்க ரூ 1 (ஒரு ரூபாய்)யும் தான் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது. மாநகராட்சி நிர்ணயதித்த தொகை தான் வெளியில் உள்ள அறிவிப்பு பலகையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் டெண்டர் எடுத்த நபர்கள் அங்கு வரும் பயணிகளிடம் விதிமுறைக்கு புறம்பாக 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதனால் வசூல் செய்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி வாக்குவாதங்களும், சண்டையும்தான் நடைபெறுகிறது.
டெண்டர் எடுத்தவர்களின் அடாவடித்தனமான செயலைப் பார்க்கும்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கு இவர்கள் வசூல் செய்யும் பணத்தில் பங்கு கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் தான் வருகிறது. பொதுமக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு, இவ்வாறு தவறு செய்யும் தனிநபர்களுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளால் தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் புலம்புகிறார்கள்.
ஆகையால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பேருந்து நிலையங்களில் டெண்டர் விடப்பட்ட கழிப்பறைகளில் அறிவித்த கட்டணத்திற்கு மேல் பொதுமக்களிடம் வசூல் செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களும் சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.
-முத்துப்பாண்டி