தமிழகம்

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் எப்படி? : – நீதிபதிகள் வேதனை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று 2017 இல் வழக்கறிஞராக பதிவு செய்தேன்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1 இல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது.

அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத்தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9 இல் வெளியிடப்பட்டது.

அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவர். இருப்பினும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.


தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர். சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. இத தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

ஜிழிறிஷிசியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இடஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், “தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வியில் படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்காக தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? அப்படியென்றால் அதன் நோக்கமே சிதைந்துவிடும். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்து விடும். தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்.

எனவே அஞ்சல் வழியில் தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு இந்த 20 சதவீத ஒதுக்கீட்டில் இடம் வழங்கமாட்டாது என அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் தான் TNPSC குருப் 1 தேர்வு நடத்த வேண்டும். அதுவரை TNPSC குருப் 1 தேர்வு நடத்த ஏன் தடை விதிக்கக் கூடாது” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button