உதயமாகிறது சிவகாசி மாநகராட்சி..!
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி நகரம், விரைவில் மாநகராட்சியாக உதயமாகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி விட்டதாக அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகாசி நகர உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளார்.
விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, மாலையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று, 380 கோடி ரூபாய் செலவில் உருவாகும் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், பட்டாசு விற்பனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்க துணை நின்றதாக சுட்டிக்காட்டிய அவர், விரைவில் சிவகாசி மாநகராட்சியாக உதயமாகும் என அறிவித்தார்.
விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.
விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அமைச்சர்கள்,எம்.பி – எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.