பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சி.பி.ஐ கடந்தாண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை என்று கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில், குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுவதையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்காக சேலம் மத்திய சிறையிலிருந்து ஐந்து பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழைத்து வராமல் இருந்த நிலையில், முதன் முறையாக நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். இதுவரை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.
காலை 11 மணிக்கு தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது பாலியல் பிரிவு என்பதாலும் முக்கிய வழக்கு என்பதாலும் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, ஐந்து பேரின் நீதிமன்றக் காவலும் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் சுமார் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் ஒப்படைக்கப்பட்டது. 68 பேரிடம் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கோவை நீதிமன்றத்திலிருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
- சாகுல் ஹமீது