தமிழகம்

ராமநாதபுரத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை போக்க துப்பில்லாத கட்சிகளை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்காக தினமும் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. தமிழகத்தில் வறட்சியான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் ராமநாதபுரத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இப்பிரச்னைக்கு எந்த அரசும் தீர்வு காணவில்லை.
கிட்டத்த 120 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் தினமும் குடிநீருக்காக பிரத்யேகமான தள்ளுவண்டிகளில் குடங்களைத் வைத்து தண்ணர் பிடிப்பதற்காக அலைகின்றனர். ஆங்காங்கே இருக்கும் ஊற்று நீரை நம்பியிருக்கும் இவர்களது வாழ்க்கை கோடை காலங்களில் மிகவும் மோசமாகிவிடுகிறது. பல கிலோ மீட்டர்கள் நடந்துவந்தும் தண்ணீருக்காக மற்றவர்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக வெயிலில் காத்திருக்க வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி ஆற்று நீரை கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் நிலைமை மீண்டும் பழையபடி மாறிவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக பருவமழையும் பொய்த்துவிட்டதால், நிலத்தடி நீரின் அளவும் வற்றிவிட்டது. இதனால் ஒவ்வொரு கோடையிலும் தண்ணீரைத் தேடி அலைவது வாடிக்கையாகிவிட்டது எனக் கூறுகின்றனர்.
2018ஆம் ஆண்டு இரவு நேரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலை ஓரமாக திரும்பி வந்துகொண்டிருந்த மூன்று பெண்கள் லாரி மோதி உயிரிழந்தனர்.
ஓரளவு தண்ணீர் வசதி உள்ளவர்களோ ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் என விற்கின்றனர். தினக்கூலி பெற்று அன்றாடப் பிழைப்பை நடத்தும் குடும்பங்கள் தண்ணீருக்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்க்கும் குடும்பத்துக்கு குறைந்தது 30 குடம் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது அதற்காக நாள் முழுக்க ஊற்றின் தொலை தூரத்தில் உள்ள அருகிலேயே அதிகாலை முதல் தவம் கிடக்க வேண்டியிருக்கிறது.
இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “ராமநாதபுரத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதை அடுத்து அமைந்த அரசு திமுக கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக தொடராமல் கைவிட்டுவிட்டது. அதற்கு முன் திமுக ஆட்சியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதையும் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டனர்.” எனக் கூறினார்.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை தங்களது அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட ஒழுங்காக வழங்கவில்லை. தேர்தலின்போது எந்த கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தாலும் ஓட்டு போட முடியாது எனச் சொல்லிவிடுவோம் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button