அரசியல்

பொன்னார் மருத்துவரை அணுகி உடல் நலத்தை பரிசோதிக்க வேண்டும் : திமுக எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் களியக்காவிளை செக்போஸ்டில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்ததை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் கண்டிக்கவில்லை. மாவட்டத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஆறு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் எம்.எல்.ஏ.வுமான என்.சுரேஷ்ராஜன் கூறுகையில், “பி.ஜே.பி. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டு எங்கு பார்த்தாலும் நலம் விசாரிக்கக்கூடியவர். ஆனால் செய்தியாளர் சந்திப்பின்போது உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடிய நிலைக்கு மாறியிருக்கிறார்.

முதலில் மருத்துவரை அணுகி அவரது உடல் நலத்தை பரிசோதிக்க வேண்டும் என அவர் நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன். அவர் பேசும்போது கிறிஸ்தவர் வில்சன் இறந்ததில் ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கும் கவலை இல்லை. அவர்களுக்கு மட்டும்தான் கவலை என்பதுபோல் பேசியிருக்கிறார். வில்சன் கொலை நடந்த அரை மணி நேரத்திற்குள்ளாக மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இதுகுறித்து விசாரித்து வருத்தப்பட்டார். அதுமட்டுமல்லாது தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாயை வழங்கினார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நான் அந்த கொலைக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்தேன். ஆனால் குமரியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் வாய்மூடி மவுனியாக இருப்பதுபோன்றும், அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் எனக்கூறுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

உங்களுடைய கூட்டணிதான் தமிழகத்தில் ஆண்டுகொண்டிருக்கிறது. இங்கு காவல்துறை அதிகாரி கொலைச் செய்யப்பட்டிருக்கிறார். எனவே சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதும், அவர்கள் ஆட்சி செய்யக்கூடிய யோக்கியதையும் இதன் மூலம் தெரிந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதை மறைத்துவிட்டு, ஆறு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லுவது என்ன நியாயம்.

பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியை கொண்டுவந்தாரா. விளையாட்டு வீரர்களை உருவாக்கும் சாய் சப்செண்டரை ஏன் கொண்டுவரவில்லை. ஆனால், ஆறு எம்.எல்.ஏ.க்களால் மாவட்ட வளர்ச்சி தடைபடுகிறது என்று சொல்கிறார். கொலையாளிகளைக் கண்டும், தீவிரவாதிகளைக் கண்டும் பயப்படக்கூடியவர்கள் அல்ல நாங்கள்.

உங்களைவிட தைரியமாக எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றல் தி.மு.க.விற்கு இருக்கிறது. அமைச்சராக இருந்ததால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் நினைக்கக்கூடாது.

குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வீசியதால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறந்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். நாங்கள் ஆறு எம்.எல்.ஏ.க்கள்தான் மீனவ மக்களுக்காக ஓடோடிச் சென்றோம். மக்கள் ஏமாற மாட்டார்கள், அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உங்களுக்கு நல்லத் தீர்ப்பை தந்தார்கள்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button