அரசியல்தமிழகம்

தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!

“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அம்மா வழியிலான அரசு சிறப்பாகச் செய்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்கள் வெற்றி பெற்றாலும் நாம்தான் ஆளுங்கட்சி. நாம் பண உதவி செய்தால்தான் அவர்கள் வேலை செய்ய முடியும். நாம் பணம் கொடுக்கவில்லையென்றால் அவர்கள் எப்படி வேலை செய்வார்கள்? தி.மு.க-வில் வெற்றிபெற்ற சேர்மேன்களிடம் பணம் கம்மியாகத்தான் கொடுப்போம்“ என்று பேசினார். இது, பெரும் சர்சையைக் கிளப்பியது. மேலும், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், கருப்பண்ணன் பேச்சை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


அதேபோல் அமைச்சர் பாஸ்கரன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழக அமைச்சர்கள் அனைவரும் எதிர்த்ததாகவும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகச் செல்வதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்‘ பேசினார். இது, பி.ஜே.பி- அ.தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தமிழக அமைச்சர்களிலே அதிரடியான கருத்துகளைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் செய்தியாளர்களிடம், “ரஜினி பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார். மேலும், “சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை” என்று குண்டைத் தூக்கிப் போட்டார். இப்படி வரிசையாக அமைச்சர்கள் கூறும் கருத்துகள் கூட்டணிக்குள் குடைச்சலையும் பொதுவெளியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி வந்தது. ஆனால், இப்படி கருத்துகள் கூற வேண்டாம் என்று பலமுறை அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமலே இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக உளவுத்துறையினர் இரண்டு தினங்களுக்கு முன்பு முதல்வரிடம் அறிக்கை ஒன்றை கொடுத்தனர். அதில், “தமிழக அமைச்சர்களின் கருத்துகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பி.ஜே.பி-யும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறது” என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்துள்ளது. இனியும் நாம் அமைதியாக இருந்தால் சரிவராது என்று முடிவுசெய்த எடப்பாடி தன் அலுவலகத்துக்கு அமைச்சர்களைத் தனித்தனியாக வரச்சொல்லியுள்ளார். முதலில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அரை மணிநேரம் பேசியிருக்கிறார். அப்போது, பி.ஜே.பி குறித்து நம் அமைச்சர்கள் பேசியதை டெல்லி தலைமை ரசிக்கவில்லை. இதை நாம் பார்த்துக்கொண்டே இருக்க முடியாதுண்ணே. பி.ஜே.பி விஷயத்திலும், சி.ஏ.ஏ சட்ட விஷயத்திலும் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது” என்று அந்த சந்திப்பில் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு, ஒவ்வொரு அமைச்சர்களாக அழைக்கப்பட்டுள்ளார்கள்.

வேலுமணி, தங்கமணி ஆகிய இருவரிடமும் கொங்கு மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, தோல்வி பற்றியே அதிகம் கேட்டுள்ளார். அப்போது, சசிகலா பற்றிய பேச்சும் எழுந்துள்ளது. அதற்கு எடப்பாடி, “அவர்கள் தரப்பில் இன்னும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று தெரியவில்லை. அதைப்பற்றி நாம் இப்போது யோசிக்கவேண்டியதில்லை” என்று சொல்லியதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் பாஸ்கரனிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துள்ளார். “நீங்கள் அமைச்சர் என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? அமைச்சரவையில் பேசப்படும் விஷயங்களை வெளியே சொல்வது தவறு என்பதாவது தெரியுமா?” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோடு வேறு சில அமைச்சர்களையும் சேர்த்து சந்தித்த எடப்பாடி, “நீங்கள் பேசுவதைக் கொஞ்சம் யோசியுங்கள். அதன் விளைவுகள் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது” என்று நாசுக்காகச் சொல்லியிருக்கிறார். அதைத் தாண்டி, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி கண்ட மாவட்டங்களின் அமைச்சர்களிடம் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் கேட்டுள்ளார்.

“இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். இப்படி உள்ளாட்சித் தேர்தலில் கோட்டைவிட்டால் எப்படி அடுத்த தேர்தலை எதிர்கொள்ள முடியும். நீங்கள் அந்த அளவுக்குதான் மாவட்டத்தை வைத்திருக்கிறீர்களா…” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார்.

ஏற்கெனவே, அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் தேவையில்லாமல் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு, அமைச்சர்கள் கூட்டணி குறித்துப் பேசியது பி.ஜே.பி தலைமையிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அதே போல், சசிகலா விவகாரத்தில் சத்தமில்லாமல் சில காய்களை எடப்பாடி நகர்த்தி வருகிறார். அதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகப் பேசியது எடப்பாடிக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அமைச்சர் கருப்பண்ணன் பேசியதும் ஆளும்கட்சிக்கு சட்டரீதியாகப் பல்வேறு சிக்கல்களை உண்டுபண்ணும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அதிகாரிகள் எடுத்துச்சொல்லியுள்ளனர். இதனால் ‘ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது. முதல்வராக அதை நாம் அனுமதிக்கக் கூடாது’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி.

இவற்றையெல்லாம் கேட்டுப் பொறுமை இழந்த பிறகே, எடப்பாடி அமைச்சர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். கூட்டமாக சந்தித்தால் அதில் சில குழப்பங்கள் வரும் என்று தனது அலுவலகத்துக்கே வரவழைத்து இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்படியும் சில அமைச்சர்களைக் கால தாமதம் காரணமாகச் சந்திக்க முடியாததால், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். எடப்பாடியின் இந்த அதிரடி, அமைச்சர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button