செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?
திமுக மாவட்டப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வுமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ.95 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் மோசடி செய்ததாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், செந்தில் பாலாஜி ஏன் இந்த வழக்கை எதிர்கொள்ளக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வாங்கினார்.
இந்தநிலையில், திருச்சியில் நடைபெற்ற தி.மு.க ஊரக உள்ளாட்சி பிரமுகர்களுக்கான பாராட்டு விழா மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ள அதிகாலையிலேயே திருச்சிக்குச் சென்றுவிட்டார், செந்தில் பாலாஜி. இந்தச் சூழலில்தான், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஒருவர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார், செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
கரூரை அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீடு, செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான அபெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி மற்றும் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் மராமத்துப் பணிகள் நடந்து வருகின்றன. வீட்டைச் செப்பனிட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை வெளியே அனுப்பிய போலீஸார், வீட்டில் இருந்த செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் பழனியம்மாள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனைக் கேள்விப்பட்டு வீட்டின் வெளியே ஏராளமான தி.மு.க-வினர் குவிந்தனர். உள்ளே இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோருக்குக் காலைச் சாப்பாட்டை அனுப்ப, அதை போலீஸார் வாங்க மறுத்ததால், அவர்களோடு தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல், செந்தில் பாலாஜி தரப்பில் பெண் வழக்கறிஞர் ஒருவரை உள்ளே அனுப்ப தி.மு.க-வினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், போலீஸார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
அதேபோல், செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான அபெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி முன்பு திரண்ட தி.மு.க-வினர், போலீஸாரின் இந்தத் திடீர் சோதனையைக் கண்டித்து சாலைமறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், கரூரில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் சோதனை நடத்தப்போகும் விஷயத்தை கரூர் மாவட்ட போலீஸாருக்குத் தெரிவிக்காமல் வந்திருந்தனர்.
இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், “செந்தில் பாலாஜி மீதான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீனும் வாங்கியிருக்கிறார். அப்படியிருக்கையில், இப்படி சோதனை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? சென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சிறப்பு அனுமதி வாங்கி, இப்படி சோதனை செய்கின்றனர். அந்த வழக்கு கோர்ட்டில் இருக்கும்போது, இப்படி ஒரு சோதனையே அர்த்தமற்றது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க பிரதிநிதிகளை அழைத்து வந்து, தலைவர் ஸ்டாலின் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால், தி.மு.க-வுக்கு தனிக்கவனம் கிடைக்கும். இதைத் தடுத்து தி.மு.க மீது அவதூறு ஏற்படுத்தத் திட்டமிட்டு, முகாந்திரமே இல்லாமல் இப்படி சோதனை நடத்த வைத்திருக்கிறார்கள்” என்கின்றனர் கொதிப்புடன்.