தமிழகம்

நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகர் மாணவி

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி லட்சுமி பிரியா தமிழக அரசிடம் நிதி உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் – தீபா தம்பதியர் மகள் லட்சுமிப்ரியா. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித அறிவியல் பிரிவில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். லட்சுமிப்ரியாவின் தந்தை கணினி பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். சிறுவயதில் இருந்தே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புத்தகங்களைப் படித்து விண்வெளி ஆராய்ச்சி சம்மந்தமான பிரிவில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த லட்சுமிப்ரியா விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடே படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் படித்துவரும் பள்ளிக்கு கடந்த வருடம் நாசா முன்னாள் விண்வெளி வீரர் டான்தாமஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய விண்வெளி பயணம் குறித்து மாணவ மாணவியரிடம் கலந்துரையாடியுள்ளார்.

இதில் மாணவி லட்சுமிப்ரியாவும் கலந்து கொண்டார் வின்வெளிவீரர் டான்தாமஸ் தன் வின்வெளிப் பயணம் குறித்த அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டதை கூர்ந்து கவனித்த மாணவி லட்சுமிப்பிரியாவுக்கு விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமானது.

நிகழ்ச்சியின் முடிவில் மாணவி லட்சுமிப்ரியா விண்வெளி வீரர் டான்தாமஸிடம் தான் விண்வெளித்துறையில் சாதிக்க விரும்பும் கனவைப் பற்றிக் கூறியுள்ளார் அதற்கு டான்தாமஸ் Go4guru என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஆன் லைன் தேர்வில் வெற்றி பெற்றால் நாசாவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாவும் அதன் மூலம் விண்வெளித் துறையில் சாதிக்க வாய்ப்புள்ளதாகவும் மாணவியிடம் கூறியுள்ளார் Go4guru நிறுவனம் அமெரிக்காவின் Florida institute of technology- உடன் இணைந்து தேசிய அளவில் International Space Science Competition என்ற அறிவியல் போட்டிகள் நடத்தி அதன்மூலம் இந்திய மாணவர்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறது.

இதனால் உற்சாகமடைந்த மாணவி லட்சுமிப்ரியா 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தன்வீட்டில் இருந்தபடியே பங்கேற்றார் ஆன்லைன் தேர்வில் வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சம்மந்தமாக 50 கேள்விகளும் பொதுவான கேள்விகள் 5 என மொத்தம் 55 கேள்விகள் கேட்கப்பட்டன அனைத்திற்க்கும் சிறப்பாக பதில் எழுதிய மகிழ்ச்சியில் தேர்வு முடிவிற்காக காத்திருந்தார் மாணவி லட்சுமிப்பிரியா go4guru நிறுவனம் இமெயில் மூலம் மாணவி லட்சுமிப்ரியாவிற்கு Best performer என்ற சான்றிதழை அனுப்பியது மேலும் மாணவி லட்சுமிப்ரியா 2020 மே மாதம் நாசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் தெரிவித்திருந்தது.

மொத்தம் ஏழு நாட்கள் நாசா பயணத்தில் இரண்டு நாட்கள் நாசாவிலும் ஐந்து நாட்கள் மற்ற விண்வெளி ஆராய்ச்சி சம்மந்தமான கல்வி நிறுவனங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளார். மேலும் அமெரிக்காவில் நடைபெறும் மற்றொரு தேர்வில் வெற்றி பெற்றால் 50% கல்வி உதவித்தொகையுடன் புளோரிடா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலேயே படிக்க வாய்ப்பும் உள்ளது.

இதனால் உற்சாகமடைந்த மாணவி லட்சுமிப்ரியா தன் கனவு நனவாக உள்ளதை தன் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தார்.

லட்சுமிப்ரியாவின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளி ஆசிரியர்களும் லட்சுமி பிரியா நாசாவிற்கு செல்ல உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ஆனால் நாசா சென்றுவர 2 லட்சத்து 25 ஆயிரம் செலவாகும் என்பதை நினைத்துநினைத்து நடுத்தரமான லட்சுமி பிரியாவின் குடும்பத்தினர் வருத்தத்துடன் உள்ளனர்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்களால் மகளை அமெரிக்காவரை அனுப்புவது மிகவும் கடினம் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் தங்களுக்கு உதவி புரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற வேண்டுகோளை மாவட்ட நிர்வாகத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் வைத்து மாவட்ட நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருந்தனர்.

மாணவியின் கோரிக்கை கடிதத்தை பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்ல தேவையான முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். பிறகு மாணவி லட்சுமி பிரியாவும் அவரது பெற்றோரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். லட்சுமி பிரியா படிக்கும் மாணவ, மாணவிகளும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • அன்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button