அரசியல்தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்! : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.

கடந்த 2019 டிசம்பர் 5-ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பினேன்.

“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்திருக்கிறது?
அதற்காக மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது?

அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?

அவ்வாறு தோண்டுகின்ற இடம் விளை நிலங்களா? அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா?”

என்று கேள்விக் கணைகள் தொடுத்திருந்தேன்.

என்னுடைய கேளிவிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில்,

“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது.
மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்,” என்று விளக்கம் அளித்தார்.

தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சதிகாரமாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தமிழகத்தின் உயிராதாரமான காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்கும் முயற்சி தொடர்ந்தால் சுமார் 56 இலட்சம் மக்கள் சொந்த மண்ணிலேயே வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமை நடக்கும். தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button