உடுமலையில் ஓர் உன்னத புரட்சி ! சாதித்தது ஜாகுவார் அகாடமி…
உடுமலையில் கிராம புற மாணவர்களிடையே ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி. புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஒரு லட்சம் விதை பந்துகள் தூவும் உலக சாதனை ஸ்கேட்டிங் பயணம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி, மூணாறு செல்லும் வழியில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் நிறைவடைந்தது.
இச் சாதனை நிகழ்ச்சியை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட், ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட், இண்டியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய நிறுவனங்கள் புதிய உலக சாதனையாக அங்கீகரிக்க சான்றிதழ் வழங்கவும் வந்தனர்.
காலை 11 மணிக்கு ஸ்கேட்டிங் பயணம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கம், உடுமலை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜெ.தம்பிபிரபாகரன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப், கோட்டாட்சியர் ஆர்.ரவிக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆர்கேஆர் பள்ளிக் குழுமங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி, ஆர்ஜிஎம் பள்ளிக்குழுமங்களின் செயலாளர் நந்தினிரவீந்திரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்.அம்சவள்ளி நன்றி கூறினார்.
அண்மையில் பிரான்ஸ்–ல் நடைபெற்ற மாநாட்டில் 11,000 விஞ்ஞானிகள் கூடி விவாதித்த ஒரே ஒரு பொருள் உலக வெப்பமயதாலை தடுப்பது எப்படி? உலகுக்கு மிக அச்சுறுத்தலான வெப்பமயமாதலை தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் 51 மாணவர்கள் பங்கேற்கும் உலக சாதனை ஸ்கேட்டிங் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாதுகாப்புடன் சாலைகளில் ஸ்கேட்டிங் செய்வது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் விதை பந்துகளை உருவாக்கினர். ஆர்ஜிஎம் பள்ளி நிர்வாகம் சார்பில் 25,000 விதை பந்துகள் உருவாக்கி கொடுக்கப்பட்டது. ஆக ஒரு லட்சம் விதை பந்துகளை மாணவர்கள் எளிதாக கொண்டு செல்ல அதற்கென பிரத்யேகமாக மடியில் கட்டிச் செல்லும் பை உருவாக்கப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 15 பேர் மாணவர்களுக்கு விதை பந்துகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
உடுமலை ஆம்புலன்ஸ் சார்பில் 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தேவையான அனைத்து முதலுதவி மருந்துகளுடன் நிகழ்ச்சி முடியும் வரை உடன் வந்து உதவி செய்தனர்.
60,000 எண்ணிக்கையிலான புங்கன், 40,000 எண்ணிக்கையிலான வேம்பு விதைகள் கொண்ட பந்துகள் உருவாக்கப்பட்டு, அவை பள்ளபாளையத்தில் இருந்து, ஒன்பதாறு சோதனைச் சாவடியில் நிறைவடைந்தது. அங்கு வனத்துறையினர் சார்பில் மாணவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு சைனிக் கோச்சிங் செண்டர் சார்பில் மாணவர்களுக்கு பழரசம் கொடுத்து ஸ்கேட்டிங் பயண நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
முன்னதாக உடுமலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்களின் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பயணம் நடைபெற்றது. அப்போது உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
- உடுமலை உதயகுமார்