பள்ளிகளை திறக்கலாம்… : உறுதியளிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
பல மாநிலங்கள் பள்ளிகள், கல்லூரிகளை திறந்துள்ளன. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்காமல் உள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போதும் மூன்றாவது அலை குறித்து அச்சம் கொள்கின்றன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பேசும் போது, “கொரோனா மூன்றாம் அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இந்த சூழலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா பள்ளிகளைத் திறக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு எடுக்கலாம். முதலில் பாதிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகள் திறப்பினால் கொரோனா அதிகரிக்கிறது என்றால், உடனடியாக பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது. அதனால், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
குழந்தைகளுக்கு இயல்பு வாழ்க்கையை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப் படிப்பின் முக்கியத்துவம் மிகவும் முக்கியம் என்பதால் இந்த பரிந்துரையை வைக்கிறேன். அத்துடன் அனைவருக்கும் இண்டர்நெட் வசதி கிடைப்பதில்லை. பள்ளிகளைத் திறப்பதில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். ஏனெனில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் என்பது இளம் தலைமுறையினரை அறிவின் அடிப்படையில் பாதித்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் ஒரங்கட்டப்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
“சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், காற்றோட்டமான வகுப்பறை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தி மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
–நமது நிருபர்