மூளைச்சாவு அடைந்த மகன் : 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோர்..!
பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரமக்குடியில் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் சரத்குமார் (21). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி பணிமுடிந்து இரவு 9.30 மணியளவில் டூவிலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இளையான்குடி அருகே அதிகரை என்ற இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக சரத்குமாரை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சை அளித்தும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் சரத்குமார் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சரத்குமாரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். மருத்துவமனை நிர்வாகம் சரத்குமாரின் இரு கண்கள், இரு கிட்னி, இதயம், கனையம் உள்ளிட்ட எட்டு உடல் உறுப்புகளை எடுத்து ஏழு நபர்களுக்கு தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்தது.
மேலும், பரமக்குடி நகர் முழுவதும் சரத்குமார் மரணம் குறித்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் “அனைவரும் கட்டாயமாக தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டவும்” இது சரத்குமாரின் வேண்டுகோள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
படிப்பறிவு இல்லாத நிலையிலும் தனது மகனின் உறுப்பு தானம் மூலம் உயிருக்கு போராடும் ஏழு நபர்களை காப்பாற்றிய சரத்குமாரின் பெற்றோரை உறவினர்கள் அனைவரும் பாராட்டினர். சரத்குமாரின் பெற்றோர் தினசரி கூலி வேலைக்கு சென்று சொற்ப வருமானம் பெற்று, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.இவர்களுக்கு போதுமான உதவிகள் செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
- தி.கார்த்தி