தமிழகம்

மனிதநேயத்தின் மறுஉருவம் கலைஞர்

கலைஞர் மு.கருணாநிதி என்பது பெயர்ச்சொல் அல்ல, கோடானு கோடி தமிழர்களின் உயிர்ச்சொல், ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை தந்தை பெரியார் தலைமையில், அண்ணா வழி நின்று மீட்டெடுத்தவர் கலைஞர். எனவே கலைஞரை தமிழினத்தின் மீட்பர் என்று அழைக்கலாம்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை கலைஞர் பெயரை குறிப்பிடாமல் எவரும் எழுத முடியாது. அரசியலின் ஆழ, அகலத்தை, நீளத்தை கண்டவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. அரசியல் வானில் கலைஞர் ஒரு இமயம். இந்த இமயத்தை எந்த ஒரு சக்தியாலும் இன்றுவரை நெருங்க இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஓடி.. ஓடி.. அவர் உழைத்த போது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார். அளவற்ற அருமைகளையும், அற்புதங்களையும் தமது பொதுவாழ்வில் செய்து காட்டியவர் கலைஞர். வாலிபவயது காலத்தில் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றி சுழன்றார். வயோதிக காலத்தில் சக்கரங்களே கலைஞருக்கு கால்கள் ஆயிற்று.

94 வயது காலம் வாழ்ந்த அந்தப் பன்முக வித்தகருக்கு எத்தனையோ தனித்துவமான சிறப்புகள் அமைந்திருந்தாலும், அவர் “தமிழாக வாழ்ந்த தலைவர்” என்பது கலைஞருக்கு உண்டான சிறப்பு மணிமகுடம். தமிழ் அவரிடம் குறைவின்றி நிறைந்திருந்தது. அதனால் தான் அவர் தமிழோடு ஆடினார், பாடினார், விளையாடினார், தமிழையே மூச்சாக சுவாசித்தார். கடைசி மூச்சு உள்ளவரை தமிழாகவே வாழ்ந்தார். இன்று தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு விதை போட்டவர் கலைஞர். திராவிட இயக்கம் என்பது ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்பு இயக்கம். தமது இறுதி காலம் வரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் இப்படிப்பட்ட மக்களுடன் தவறாது, தளராது நின்றார்கள்.

பதவி என்பதை உதவி என்று கருதுபவர் கலைஞர். தமது ஆட்சி காலத்தில் படுபாதாளத்தில் இருந்த மக்களை கைகொடுத்து மேலே உயர்த்தினார். காலம் முழுவதும் அடக்கப்பட்டு ஒதுங்கி இருந்த பெண்களின் பால் இவரது கருணை பார்வை விழுந்தது. இந்தியாவிலேயே முதன் முதலாக தனது ஆட்சி காலத்தில் பெண்களுக்கான சொத்துரிமையை சட்டபூர்வமாகியவர் கலைஞர் மட்டுமே. பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு 2023 ல் தான் மக்களவையில் நிறைவேறியது. இதனை 28 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை சட்டபூர்வமாகியவர் கலைஞர். இன்று பெண்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாக, தலைவர்களாக, மேயர்களாக பதவிக்கு வருவதற்கு வித்திட்டவர் கலைஞர்.

2007 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் அவர்களை முன்மொழிந்து அவருக்கு ஆதரவாக திமுக மகளிர் அணி சார்பில் பெருந்திரள் பேரணி நடத்திக் காட்டியவர் கலைஞர்.

இரப்பதை விட இறப்பதே சாலச் சிறந்தது என்பார்கள். இரந்து உயிர் வாழ்தல் வேண்டி கெடுக பரந்துலகியற்றியான், என்று இறைவனுக்கே சாபமிட்டார் வள்ளுவர். அதாவது ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படுமாயின் இந்த உலகை படைத்த இறைவன் கெட்டொழிய வேண்டும் என்று சாபம் விடுகிறார் வள்ளுவர். திருக்குறளுக்கு உரை எழுதி, வள்ளுவருக்கு கோட்டம் கட்டி, 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை எழுப்பிய கலைஞர்,

1971 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கட்டத்தில் பிச்சைக்காரர் மறு வாழ்விற்கு இரவலர் இல்லங்கள் அமைத்தார். தொழு நோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மனிதர் அமர்ந்து கொண்டு, மனிதர் இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா முறையை ஒழித்தவர் முதலமைச்சராக இருந்த கலைஞர் மட்டுமே. இதேபோல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கண் பார்வையற்றோருக்கு கண்ணொளி வழங்கி கண்ணாடி வழங்கிடும் திட்டத்தினை கலைஞர் செயல்படுத்தினார்.

2000 ஆண்டில் மருத்துவ குழுக்களை கிராமங்களுக்கு அனுப்பி ஏழைகள் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தினை அறிமுகம் செய்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் இதர சமூகத்தினரை போல கௌரவமாக, கண்ணியமாக வாழ வேண்டும், வசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் மனதில் தோன்றிய திட்டம் தான் குடிசை மாற்று வாரியம். இந்த திட்டம் இன்று இந்தியாவின் முன் மாதிரி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. எப்போதும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி சிந்தித்தவர் கலைஞர். அவர்களின் நலனுக்காக திட்டங்களை தீட்டியவர்‌.

80 ஆண்டு காலத்திற்கும் மேலான சமூகப் பணி, 70 ஆண்டு காலம் திமு கழகத்தை கட்டிக் காத்தவர், 60 ஆண்டு கால சட்டமன்றப் பணி, 50 ஆண்டு காலம் திமுக தலைவர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், 18 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர், நற்றமிழ் நாட்டிலே நீ நடக்காத சாலை இல்லை, பெற்ற தாய் நாட்டில் நீயும் பேசாத ஊரு இல்லை, நெற்றியில் தமிழை வைத்தோர் நெடுங்கணக்கதிகம், ஆனால் நெற்றியில் தமிழை வைத்த வித்தகன் நீ மட்டும் தான், என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அறுசீர் விருத்தம் அலங்காரம் கடந்தும் உண்மையை பேசுகிறது.

கலைஞர் ஒரு பிறவிப் போராளி, வாழ்க்கை இன்பமயமானது, இன்பம் போராட்டமயமானது என்றார் மா ஓசேதுங். கல்லக்குடி போராட்டம் தொடங்கி பாளையங்கோட்டை தனிச்சிறை வரை கலைஞர் கண்ட களம், புகுந்த சிறைகள், வரலாறு வரவில் வைத்துக் கொள்ளும். 1986 ஆம் ஆண்டு இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற அரசியல் சாசனத்தின் நகலை எரித்து 63 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருந்தார். கலைஞருக்கு கைதி உடை கொடுக்கப்பட்டது. ஆனால் அதை அணிவதற்கு முன்னதாகவே கலைஞர் விடுதலை செய்யப்பட்டார். என் தம்பி கருணாநிதி வாழும் பாளையங்கோட்டை சிறை எனது கோடை வாசஸ்தலம் என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.

இந்திய அரசியலாளர்களில் கலைஞர் அளவுக்கு போராட்டம் நடத்தியவர்கள், சிறை புகுந்தவர்கள் எவரும் இல்லை. சுதந்திரத்திற்கு முன்னதாக பல தலைவர்கள் சிறையில் வாடினார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் கலைஞருக்கு நிகராக சிறை சென்றவர்கள் எவருமில்லை. வேண்டுமானால் ஊழல், சொத்து குவிப்பு போன்ற காரணங்களால் சிலர் சிறைக்குப் போய் இருக்கலாம். ஆனால் மக்களுக்காக போராடி சிறைக்குச் சென்ற ஒரே அரசியல் தலைவர் கலைஞர் ஒருவரே. அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் எவருமில்லை.

இறந்த பின்னரும் போராடிய ஒரே தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே. கலைஞரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய முற்பட்ட நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. திமு கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சட்டம் அனுமதி அளித்தது. இறந்த பின்னரும் போராடி வென்ற ஒரே தலைவர் கலைஞர்.

போராட்டம் கலைஞரின் இரத்த ஓட்டம், லட்சியத்தை அடையாமல் கலைஞர் ஓய்ந்ததில்லை, எதிர்ப்பும், எதிர்நீச்சலும் கலைஞரின் உடன்பிறப்பு. அந்த வார்ப்பு தளபதி ஸ்டாலினிடம் நிறைந்துள்ளது. அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றவர் கலைஞர், கலைஞரின் இதயத்தை இரவலாக பெற்றவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

& சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button