தமிழக அரசியலில் மீண்டும் மதுரை கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. கடந்த சில வருடங்களாக மதுரையில் மையம் கொள்ளாத தமிழக அரசியல், மீண்டும் கோவில் நகரத்தில் மையம் கொண்டு உள்ளது. மதுரையின் இந்த காற்றழுத்த தாழ்வு மையம் சீக்கிரம் அரசியல் புயலாக கூட மாறும் என்று கூறுகிறார்கள்.
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்.. இதுதான் தற்போது தென்னக அரசியலில் மையம் கொண்டு இருக்கும் புயல். மதுரை மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமியிடம் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது சாதராண கோரிக்கையாக கடந்து போகப்படும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதன்பின் வரிசையாக அதிமுக அமைச்சர்கள் மதுரைக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தனது பேட்டியில், மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் அதிக வளர்ச்சியை கொடுக்கும். தென் மாநிலங்கள் வேகமாக வளரும். தென்னகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மக்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், என்று குறிப்பிட்டார்.
உடனே அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.. நானும் மதுரைகாரன்தான் என்று களமிறங்கினார். உதயகுமாரின் மதுரை தலைநகர் அறிவிப்பை செல்லூர் ராஜுவும் ஆதரித்தார். அவர் தனது பேச்சில், இது அதிமுகவின் பல்லாண்டு கனவு. மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் கூட ஆசைப்பட்டார். நானும் மதுரையை பூர்வீகமாக கொண்டவன். அதனால் மதுரையை இரண்டாம் தலைநகராக பார்க்க எனக்கும் விருப்பம்தான், என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.
இப்படி அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் அதிமுகவில் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவித்தால் தென் மாவட்டங்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும். தொழிற்சாலைகள் வேகமாக அங்கு கட்டப்படும். தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களில் நிறுவனங்கள் உருவாகும்.
மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடையும் என்பது நிதர்சனம். ஆனால் அதிமுகவின் இந்த திடீர் மதுரை பிளானுக்கு வெறும் தலைநகர் அறிவிப்பும், முன்னேற்றமும் மட்டும் காரணம் இல்லை. இதற்கு பின் தேர்தல் ரீதியான திட்டங்களும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 2021 தேர்தலை மையமாக வைத்தே அதிமுக ஆபரேஷன் மதுரையை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள்.
மதுரை மற்றும் மதுரைக்கு கீழே தென் மாவட்டங்களில் திமுக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தூத்துக்குடி அரசியலில் கனிமொழி வருகைக்கு பின் திமுக தென் மாவட்டங்களில் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் மதுரை தொடங்கி மதுரைக்கு கீழே இருக்கும் தென் மாவட்டங்களில் திமுக எளிதாக வெற்றிபெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நிலைமை இப்படி இருக்க அதிமுக தற்போது மதுரை மீது கவனத்தை திருப்பி உள்ளது. மதுரையில் இரண்டாம் தலைநகரை கொண்டு வருவது குறித்து பேசினால், அது தென்னக மக்கள் இடையே புதிய நம்பிக்கையை உண்டாக்கும். இன்னும் தேர்தல் நடக்க வெறும் 8 மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கிறது. இப்போது அரசியல் தலைவர்களின் எல்லா பேச்சுமே ஒரு அரசியல் அறிவிப்பாகவே பார்க்கப்படும். மக்களை கவர்வதற்கான அறிவிப்பாகவே பார்க்கப்படும்.
தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே தமிழக அரசு தமிழகத்தில் பல புதிய மாவட்டங்களை உருவாக்கியது. இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மாவட்ட பிரிப்பு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் தலைநகர் குறித்த விவாதத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் மட்டுமின்றி மதுரையில் சைலண்டாக இருக்கும் இருக்கும் சில அரசியல் தலைவர்களுக்கும் கூட இது அரசியல் ரீதியாக பயன் அளிக்கும் என்கிறார்கள்.
மதுரையில் உள்ள சில அரசியல் தலைவர்களுக்கும் குறி வைத்து இந்த விவாதங்கள் எழுந்துள்ளது. அதிமுகவிற்கு சில முக்கிய தலைவர்களை இழுக்கும் யுக்தி இது என்றும் பேசிக்கொள்கிறார்கள். அதிமுகவை தென்னகத்தில் மீண்டும் பலப்படுத்தும் வகையில் இந்த விவாதம் உயிர்பெற்றுள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருச்சியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்பின் பலமுறை திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களையும் தலைநகர் மற்றும் துணை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்துள்ளது. தற்போது மீண்டும் மதுரை துணை தலைநகர் அறிவிப்பு வெளியாகி உள்ளது… இந்தமுறை இரண்டாம் தலைநகர் அறிவிப்பு உண்மையில் நிஜமாகுமா அல்லது அப்படியே காற்றில் கரைந்து போகுமா என்று பார்க்கலாம்!
இதுகுறித்து அரசியல் விமர்சகரும் கறுப்புக் குதிரை நூலாசிரியருமான நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் பதிவில், ‘உண்மையிலேயே தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்க வேண்டியது திருச்சி தான். திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை தமிழ்நாட்டின் வணிக தலைநகரமாகவும் இருக்கட்டும். திருச்சியிலிருந்து தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் ஆறு மணி நேரத்தில் போய் விட முடியும்.
ஆனால் இன்றைக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு வருவதற்கே 8&- 10 மணி நேரமாகும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. ஒரு மாநிலத்தின் தலைநகரத்தை அணுகவே குடிமக்கள் 10-&12 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கக் கூடாது.
துறைமுகங்களுக்கு பக்கத்தில் இருப்பவை தான் தலைநகரங்கள் என்பது பிரிட்டிஷ் அரசு அவர்கள் வசதிக்குச் சொன்னது. அதனால் தான் மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா முக்கிய நகரங்களாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் கடல்வழி வணிகத்தை விட, இழை வழி வணிகம் தான் அதிகம். அதனால் துறைமுகங்கள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. திருச்சிக்கு தலைநகரத்தினை மாற்றுவதால் அரசுப் பணிகள் பலவும் அங்கே போகும். சென்னை தலைநகரமாக இருப்பதால் இப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என்கிற மூன்று மாவட்டங்கள் தான் நேரடியாக பயன்பெறுகின்றன.
திருச்சியின் எல்லைகளோடு எட்டு மாவட்ட எல்லைகள் இணைகின்றன. திருச்சி தலைநகரமானால் அந்த எட்டு மாவட்டங்களுக்கும் பலன்கள் கூடும். திருச்சியில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் எல்லாப் பக்கங்களையும் இணைக்கின்றன. சென்னையை விட நில மதிப்பு திருச்சியில் குறைவு. அரசாங்கம் மிகப் பெரிய அளவில் அரசு அலுவலங்களையும், அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகளையும் கட்ட முடியும். அடுத்து வரப் போகும் அரசு இதை தீவிரமாக பரிசீலிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
- உதுமான் அலி