பல ஆண்டுகளாக போலி மருத்துவம் : கோடிகளில் சொத்து..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மருந்தாளுனர் படிப்பை மட்டும் முடித்துவிட்டு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கோடிகளில் சொத்து சேர்த்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழம்பட்டு கிராமத்தில் “அருண் மெடிக்கல்ஸ்” என்ற பெயரில் மருந்தகத்தை நடத்தி வந்த சேட்டு என்ற நபர், மருந்தாளுனருக்கான “டி – ஃபார்ம்” படிப்பை மட்டும் முடித்துவிட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, தன்னை மருத்துவர் போலவே காட்டிக்கொண்டு மருத்துவம் பார்த்தார் என்று கூறப்படுகிறது. ஆங்கில மருந்துகள், சித்தா மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள் என அத்தனை மருந்துகளும் சேட்டுவிடம் கிடைக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் அத்தனையும் மார்க்கெட்டில் கிடைக்கும் மூன்றாம் தர போலி மருந்துகள்.
நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் இவர் பிரபலம் அடையவே, நோயாளிகளின் வரத்தும் அதன் மூலம் வருமானமும் அதிகரித்துள்ளது. தன்னுடைய போலி மருத்துவத்தின் அடுத்த கட்டமாக கருத்தரிப்புக்கான சிகிச்சை, கருக்கலைப்பு என முன்னேறிய சேட்டு, அதற்காக நபர் ஒன்றுக்கு பல ஆயிரங்களில் பணம் வசூல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி சேர்ந்த பணத்தில் மூரார்பாளையம், செல்லியம்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் கிளைகளை நிறுவி மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என்கின்றனர் கிராமத்தினர்.
இன்றைய தேதியில் சேட்டுவின் ஒரு மகன் ரஷ்யாவிலும் மற்றொரு மகன் ஹாங்காங்கிலும் மருத்துவம் படித்து வருகின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சேட்டு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குச் சென்ற புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குச் செல்லவே, அங்கிருந்து விசாரணைக்கான ஆணை வந்திருக்கிறது.
இதனையடுத்து சோழம்பட்டு வந்த மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள், நோயாளிகள் போலவே சென்று சேட்டுவிடம் பேச்சு கொடுத்துள்ளனர். வந்திருப்பது அதிகாரிகள் என்பது சில நிமிடங்கள் கழித்து தெரியவந்ததும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார் சேட்டு. சேட்டுவின் மருந்தகத்தில் இருந்து ஏராளமான போலி மருந்துகள், மருத்துவ சாதனங்கள், 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இந்திய அளவில் கவனிக்கத்தக்க சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மக்களின் உயிர்களோடு விளையாடும் வகையிலும் கிராமப் புறங்களில் உலவிக் கொண்டிருக்கும் சேட்டு மாதிரியான போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.