கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?

பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி தம்பதியருக்கு சரவணன் என்கிற மகனும், வித்யா (22) என்கிற மகளும் உள்ளனர். சரவணன் வயரிங் வேலை செய்துவந்த நிலையில், வித்யா கோவை அரசு கல்லூரியில் எம்.ஏ படித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சர்ச்சுக்கு சென்றிருந்த தந்தை தண்டபாணியும், தாய் தங்கமணியும் திரும்பி வந்து பார்த்தபோது வித்யா மீது பீரோ விழுந்து ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலேன்சுக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலேன்ஸ் ஊழியர்கள் வித்யாவை பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டதாக கூறியதுடன், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இதனிடையே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் உடலை அங்குள்ள பொதுமயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவர் வித்யாவை காதலித்து வந்ததாகவும், வித்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் நேற்று (01.04.2025) மாலை பல்லட்டம் வட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் குகன் தலைமையிலான மருத்துவர்கள் குழு வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். முடிவில் வித்யாவின் பின் தலலையில் கடுமையாக தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வித்யாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் சரவணன் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கையை சொந்த அண்ணனே அரிவாளால் கொடூரமாக தலையின் பின்புறம் வெட்டி கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. வித்யாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவம் நடந்தபோது ஊரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்ததாகவும், கொலையை செய்துவிட்டு குளித்து முடித்து நிதானமாக வேறு உடை மாற்றிக்கொண்டு திருவிழாவில் கலந்துகொண்ட சரவணன், பெற்றோர் தகவல் கொடுத்து வந்து பார்ப்பது போல் நாடகமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே வித்யாவை ஆணவக்கொலை செய்துவிட்டதாக செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே புகார் கொடுத்ததாக கூறப்படும் காதலன் வெண்மணி என்ன ஆனார் ? எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.

இந்நிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடந்தது ஆணவக்கொலையா ? ஆத்திரத்தில் நடந்ததா ? என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே காவல்துறை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.