பல்லடம் பத்திர பதிவில் தலைவிரித்தாடும் லஞ்சம்… : பெண் பத்திர பதிவாளர்கள் அதிரடி மாற்றம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமீப காலமாக பத்திர பதிவிற்கு வருபவர்கள் பதிவு செய்ய ஆகும் செலவை கேட்டால் தலை தெரித்து ஓடக்கூடிய அளவிற்கு லஞ்சம் தலைவித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பல்லடம் தாலுக்கா. திருப்பூர் மாவட்டம் உருவாவதற்கு முன் கோவை மாவட்டத்தில் இருந்த போது பல ஆண்டுகளாக பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியாக திருப்பூர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 39 கிராமங்களை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்காவில் அதிக அளவிற்கு பத்திர பதிவு நடைபெறுவது வழக்கம். நாள் ஒன்றிற்கு சுமார் 100 பத்திர பதிவு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருப்பூரில் இருந்து மாறுதலாகி பிரவினா மற்றும் ஈஸ்வரி ஆகிய இரண்டு பதிவாளர்கள் பல்லடம் பத்திர பதிவு துறை அலுவலகத்திற்கு வந்தனர். இரட்டை சகோதரிகளாக செயல்பட்ட இவர்கள் வந்த பிறகு அடிக்கடி பத்திர எழுத்தர்களுக்கும் இவர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்தது. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை சொல்லியே பத்திரங்களை திருப்ப அனுப்பிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு பத்திர எழுத்தர் பொதுமக்களிடம் பதிய முடியாமல் பதிவாளார்களால் திருப்பி கொடுத்த பத்திரம் அடுத்த சில நாட்களில் மற்றொருவரை வைத்து பத்திர பதிவு செய்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதால் பத்திர பதிவு செய்ய வரும் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கைட்லைன் வேல்யூவை விட சகோதரிகள் கேட்கும் லஞ்சம் அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது. பட்டியல் போட்டு லஞ்சம் கேட்பதாகவும்
1) வீட்டு மனை பதிவிற்கு ரூ. 1,000
2) கிரையம் (ஒரு கோடிக்கு) -ரூ. 5,000
3) பாகசாசனம்- ரூ. 15,000
4) செட்டில்மெண்ட்- ரூ.5,000
5) எம்.ஓ.டி., கடன் (10 லட்சத்துக்கு)- ரூ.5,000
6) மூலப் பத்திரம் இல்லாதது – ரூ..50,000 முதல்
7) சைட் பார்க்க (ஏக்கருக்கு)- ரூ.50,000 லஞ்சமாக கேட்பதாகவும் பகீர் புகாரை தெரிவித்தனர்.
மேலும் லஞ்சம் வசூல் செய்து கொடுக்கும் புரோக்கர்களின் பத்திரம் மட்டுமே அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவதற்கு பத்திர எழுத்தர்கள், தட்ட்ச்சர்கள், பத்திரம் தயாரிப்பவர்கள் என 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பொறுத்து பார்த்து வெறுத்துப்போன பத்திர எழுத்தர்கள் பத்திர பதிவாளர்கள் ஈஸ்வரி மற்றும் பிரவினாவிற்கு எதிராக தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
முதலமைச்சர் தனிப்பிரிவு, பத்திர பதிவித்துறை ஐஜி உட்பட பல்வேறு துறைகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். மேலும் ஒப்பன் லஞ்சம் பெறும் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதினை வலியுறுத்தி ஒருவாரம் அடையாள பத்திர பதிவை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பத்திர எழுத்தர்கள் அறிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை, பத்திரிகை துறை, பத்திரப்பதிவுத்துறை, சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் துச்சமென எண்ணி லஞ்சப்பணத்திற்கு பல் இழிக்கும் பத்திர பதிவிற்கு எழுத்தர்கள் கொடுத்த பதிலடி தற்போது சரவெடியாக மாறி போராட்ட களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இதனிடையே பத்திரவு பதிவு டிஐஜி சாமிநாதன் தலைமையில் பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பத்திர எழுத்தர்கள் தங்களது புகார்களை தெரிவித்தனர்.
மேலும் பத்திர பதிவாளர்கள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களிடம் பட்டா மாறுதல் மற்றும் பத்திர பதிவிற்காக அதிக அளவு லஞ்சம் பெற்றதாக பகீர் குற்றச்சாட்டு வைத்தனர். இதனிடையே பதிவாளர் இருவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக பத்திர எழுத்தர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பத்திர எழுத்தர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக பிரவினா மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரையும் பல்லடம் சார் பதிவாளர்கள் பணியில் இருந்து விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
– நமது நிருபர்