எந்த அதிகாரிக்கு எவ்வளவு லஞ்சம்? : இ-பாஸ் மோசடி…
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உயரும் கொரோனா பாதிப்பின் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, உரிய ஆதாரங்கள் உள்ள நபர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக இ பாஸ் பெற்று தினமும் பயணிகளை சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் அழைத்து வருவது அம்பலமாகி வருகிறது.
அதுகுறித்து நடத்திய ஆய்வில், ஈரோட்டை சேர்ந்த சில தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் மூலம் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“ஈரோடு to சென்னை வாடகை இருந்தால் கூறவும் E-Pass என்னிடம் உள்ளது (30.06 முதல் 02.07 வரை) “ என்று வாட்ஸ் ஆப்பில் உலா வந்த தகவலில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம்.
“ஈரோட்டில் இருந்து சென்னை செல்ல வேண்டும். எவ்வளவு கட்டணம்?” என்று கேட்டதற்கு, “ஒரு ஆளுக்கு 3,700 ரூபாய். தாம்பரத்தில் இறக்கி விடுவோம். வழக்கமாக கி.மீ க்கு 12 ரூபாய் வாங்குவோம். ஆனால், இப்போது 10 ரூபாய் கொடுங்கள் போதும்“ என்றார்.”பாஸ் இருக்கிறதா, பத்திரமாக சென்று விடலாமா?” என்று கேட்டதற்கு, “ஜூலை 2 ஆம் தேதி வரைக்கும் எங்களிடம் 4 பாஸ்கள் கைவசம் உள்ளன. சென்னையில் உதவி ஆட்சியர் ஒருவர் மூலம் இந்த பாஸ் பெறப்பட்டு உள்ளது. அவருக்கு ஒவ்வொரு பாஸ்க்கும் 1000 ரூபாய் கொடுத்து வாங்கி வைத்துள்ளோம். முழு ஊரடங்கு என்றாலும் எந்த பிரச்சனையும் வராது” என்றார்.
“போலீஸ் சோதனையில் தெரிந்து விடுமே…?” என்ற கேள்விக்கு,
“ஏற்கனவே வேறு நபர்களின் பெயர்களில் தான் அந்த பாஸ்கள் இருக்கின்றன. போலீஸ் சோதனையின் போது பயணிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்று மட்டும் தான் பார்ப்பார்கள். எனவே பயப்பட வேண்டாம். ஒருவேளை உங்கள் பெயரிலேயே பாஸ் வேண்டும் என்றாலும் ஏற்பாடு செய்து விடலாம்“ என தெரிவித்தார்.
இதே போன்று, “ஈரோடு – பெங்களூர் செல்ல வேண்டுமெனில் தொடர்பு கொள்ளவும். ஜூலை 2, 3, 4 ஆகிய நாட்களில் பாஸ் உள்ளது” என்ற தகவலில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் கட்டணம் மற்றும் டிரைவர் பேட்டா 200 ரூபாய் வேண்டும் என்றும் டோல்கேட் கட்டணங்களை பயணிகளே செலுத்த வேண்டும் என்றும் இவை தவிர ஒரு பாஸ்க்கு 150 ரூபாயும் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் ஒருபுறம் உச்சத்தை எட்டி கொண்டிருக்கும் சூழலில், சில தனியார் கால் டாக்ஸி நிறுவனங்களின் லாப நோக்கத்தால், உரிய ஆதாரங்களை வைத்துக் கொண்டும் இ-பாஸ் பெற முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
-நமது நிருபர்