சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீடு, சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது பல்வேறு ஆவணங்கள், துண்டு சீட்டுகள், சொத்து விவரங்கள் போன்றவை கிடைத்துள்ளன. தற்போது அதன் விவரங்களை வருமானவரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் 2016-ம் ஆண்டு ரூ.1,900 கோடி அளவுக்குப் பணமதிப்பிழப்பு பணத்தை வைத்து சசிகலா சொத்துகள் வாங்கியதும் கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இந்தச் சொத்துகளை சசிகலாவின் பினாமிகள் பெயரில் பணமதிப்பிழப்பு நடந்த பிறகு வாங்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் புள்ளிவிவரங்களோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது சசிகலா தரப்பினருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 22-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கூறியிருந்தது வருமான வரித்துறை. இதையடுத்து வருமான வரித்துறையினரின் நோட்டீஸ் 19-ம் தேதிதான் எங்களுக்கு வந்தது. 22-ம் தேதிக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதால் அதற்குள் பதில் அளிக்க முடியாது. எனவே, ஒரு மாதம் கால அவகாசம் தேவை என சசிகலா தரப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதை ஏற்க மறுத்த வருமான வரித்துறை 15 நாள்கள் மட்டும் அவகாசம் வழங்கியது. ஆனால், அப்போதும் சசிகலா தரப்பு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து இறுதியாக டிசம்பர் 11-ம் தேதி சசிகலா தரப்பு ஆடிட்டர் தங்கள் பதிலை வருமான வரித்துறையினரிடம் தாக்கல் செய்துள்ளார்.
அதில் பணமதிப்பிழப்பு பணம் பற்றியும் சசிகலாவின் சொத்து விவரங்கள் அவரது வருமானம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பதில் அறிக்கை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பணமதிப்பிழப்பு பணம் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார் சசிகலா.
மேலும், 2016 -& 17 மற்றும் 2017-&18-ம் நிதியாண்டுகளில் நமது எம்.ஜி.ஆர், ஜெயா பிரின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தான் உரிமையாளராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கோடநாடு எஸ்டேட், ராயல் வேலி எக்ஸ்போர்ட், கிரீன் டி எஸ்டேட், ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி என்டர்பிரைஸஸ் போன்றவற்றுக்கு பங்குதாரராக இருந்துள்ளார்.
இதைத் தவிர சசிகலா இந்தோ- தோஹா கெமிக்கல் அண்ட் பார்மா லிமிடெட் மற்றும் ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். மேலும், ஜாஸ் சினிமாஸ் லிமிடெட்டில் 41.66 லட்சம் பங்குகளையும், அரே லேண்ட் டெவலப்பர்ஸில் 3.6 லட்சம் பங்குகளும் ராம்ராஜ் அக்ரோ மில்ஸில் 36,000 பங்குகளையும் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பிழப்பு பணத்தை வைத்து சொத்துகள் வாங்கப்பட்டதாகக் கூறுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.