வரதட்சணை கொடுமைக்கான தண்டனை : 7 லிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை
தமிழகத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம், அரசு சேவை இல்லங்கள், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டுவருகிறது.
நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் வகையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க மத்திய அரசின் அனுமதி பெற்று சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார்.
அதிமுக அரசு பெண்கள், குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
2020-&21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. துணை நிதிநிலை அறிக்கையில் கொரோனா கட்டுபாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிக்களுக்கு 9,027 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை இலவசமாக வழங்க 3,359 கோடி ரூபாய் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 4,218 கோடி அதில் சேர்க்கப்பட்டுள்ளது. தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ஆயிரம் கோடியே 109 லட்சமும் மேலும் 1,000 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேளாண்துறைக்கு ரூபாய் 107 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசின் மானியமாக ரூபாய் 316 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூபாய் 437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூபாய் 82 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கு, வருவாய் கோட்டாச்சியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்கு மொத்தமாக 645 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகை வழங்க ரூபாய் 170.28 கோடியும், 5 புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூபாய் 645.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துணை நிதிநிலை மதிப்பீடு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
– உதுமான்அலி