பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்..! : சிக்கிய துணை தாசில்தார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாடசியரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலூரை அடுத்த கேத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி(53). இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா மாறுதலுக்கு காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து கேத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை அணுகி தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டபோது பல்லடம் வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியரிடம் சென்று விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து ராஜாமாணி பல்லடம் தாலுக்கா துணை வட்டாட்சியர் மேகநாதனை அணுகி கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். மேலும் பட்டா மாறுதலுக்கு மேகநாதன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயணம் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை மேகநாதனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் தட்க்ஷணா மூர்த்தி தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்து மேகநாதனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் மேகநாதனை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– நமது நிருபர்