டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் புகுந்து தகராறு செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அக்கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் குடியுரிமை சட்ட வாக்கெடுப்பின்போது மட்டும் சென்று தனது வாக்கை அரசுக்கு ஆதரவாக பதிவு செய்தார். அதுவே விமர்சனத்துக்கு உள்ளானது இந்நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் வருகை குறித்த தகவல் வெளியானது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான அளவில் 15% மட்டுமே வருகை பதிவு இருந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பா.ம.கவினர் வழக்கறிஞர் வினோபா என்பவர் தலைமையில் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு அங்குள்ள ஊழியர்களை செய்தியாளர்களை மிரட்டி பொருட்களை சேதப்படுத்தினர்’ என்று செய்திகள் வெளியானது.
அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு இதழ்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் உள்ள விவரங்கள், அவர்கள் ஆற்றிய உரைகள், அவர்கள் கேட்ட கேள்விகள், அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் – சட்டமுன் வடிவுகள் ஆகியவற்றை தொகுத்து ஒவ்வொரு உறுப்பினர் பற்றியும், செய்தி வெளியிடுவது வழக்கமான நடைமுறையில் உள்ள ஒன்றாகும். என்னைப் பற்றிகூட, நான் எத்தனை நாள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டேன்..- எத்தனை கேள்விகள் கேட்டேன்.. – எத்தனை முறை உரையாற்றினேன் என்ற விவரங்களை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வார இதழில், அ.தி.மு.க. எம்.பி.,கள் 37 பேர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து விரிவாக தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்கள். இது அவர்களின் உரிமை.
அதில் தவறு இருந்தால், அது தவறு என்று, ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, மறுப்பு செய்தி வெளியிடச் சொல்லலாம். உண்மையை உணர்ந்து, கலவரம் செய்தவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் முழுமையாக பங்ககேற்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதை விட்டுவிட்டு, அந்த உண்மைச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை அலுவலத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது ஜனநாயகவிரோத – மக்கள்விரோத -பாசிச செயலாகும். இத்தகை செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு, பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தின்மீது எந்த காலத்திலும் பா.ம.க.வுக்கு நம்பிக்கையில்லை என்பதை பா.ம.க.வினரின் இந்த செயல் மீண்டும் உறுதிபடுத்துகிறது. பா.ம.க.வினரின் இத்தகு வன்முறைச் செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயலுக்கு மறுப்பு தெரிவித்து பா.ம.க வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்புமணி ராமதாஸுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தின், அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் சிவகுமார் மற்றும் சக பணியாளரான ஜெயா மேனன் அவர்களின் அழைப்பின் பேரில் நேரில் சென்று அவர்கள் வெளியிட்ட செய்திக்கான விளக்கம் கோரப்பட்டது.
அவர்களின் அலுவலக காண்பிரன்ஸ் அறையில் அமர்ந்து அவர்களிடம் அவர்கள் வெளியிட்ட அவதூறு செய்திக்கான விளக்கத்தையும், அதற்கான நமது தரப்பு பதிலையும் நமது கட்சியின் செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி விளக்கமாக பேசினார்.
அப்போது இந்த நிகழ்வுக்கு தொடர்பில்லாத சிலர் அந்த அறையில் நுழைந்து அவரிடம் விளக்கத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்சித்து அவரை வெளியேறும்படி கூறினார். அதற்கு நான் அவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளேன் என்றும் நீங்கள் உங்கள் அலுவலக சக பணியாளரிடம் கேளுங்கள் என்று கூறினார்.
அதற்கு ஜெயா மேனன் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சக ஊழியர்களை அந்த அறையை விட்டு வெளியேற்றினார். பின்னர் அந்த செய்தியில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்வதாகவும், பதில் செய்தி வெளியிடுவதாகவும், ஜெயமேனன் கூறினார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸிடம் பேசுகிறோம் என்றும் கூறினர். இவை அனைத்தும் வீடியோ பதிவாக உள்ளது. தேவைப்படும் ஊடகவியாளர்களுக்கு தரத் தயாராக உள்ளோம். வழக்கமான ஊடக தர்மம் ஏதும் இல்லாமல் திட்டமிட்டு, ஒரு பொய்யான தகவல்களை பாமகவுக்கு எதிராக ஊடகவியாளர்கள் பரப்பி வருவது அவர்களின் தரத்தை காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.