இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் களம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் கேசி ஆணிமுத்து போட்டியிடுகிறார். அந்தப் பகுதியில் பிரபலமான காங்கிரஸ் பாரம்பரியமான அம்பலம் குடும்பத்தின் வாரிசு கருமாணிக்கம் போட்டியிடுகிறார். அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு போட்டியாக அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனும் அமமுக மாவட்டச் செயலாளருமான வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார்.
அமமுக வேட்பாளர் ஆனந்த் ஏற்கனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றவர். இந்தப் பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஏற்கனவே யூனியன் சேர்மனாக இருந்தவர் என்பதாலும் இன்றைய அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லியும், இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சனைகளான மீனவர் பிரச்சனைகள், விவசாயிகளின் பிரச்சனை, குடிதண்ணீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாக கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கும் ஆணிமுத்துவும் இந்தப் பகுதியைச் சார்ந்தவர்தான். ஆனால் தொகுதி முழுவதும் பெரிதாக இவருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவின் தொண்டர்களையும், இரட்டை இலை சின்னத்தை மட்டுமே நம்பி களத்தில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தான் வேட்பாளர் பெயர் அறிவித்துள்ளார்கள். அதிமுக வேட்பாளர் ஆணிமுத்துவும், காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கமும் பிரச்சார பணிகளை இன்னும் துவக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி அமமுக வேட்பாளரே களத்தில் உள்ளார்.
பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த இடைத்தேர்தலில் வென்ற சதன்பிரபாகருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது. திமுக சார்பில் புதியவராக முருகேசன் என்பவர் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணியில் தேமுதிக களத்தில் உள்ளது. இந்தத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முத்தையா தான் அமமுக வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே இரண்டு வருடம் எம்எல்ஏ வாக இருந்ததால் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் இந்த முறையும் தேர்தல் வேலை பார்க்கிறார் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர்.
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இந்த ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக களத்தில் இறங்கி வேலைபார்த்தார்கள். மேலும் ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்ததும் ஒரு காரணம். ஆனால் இந்த முறை சதன்பிரபாகருக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமையாக இறங்கி வேலை பார்ப்பார்களா என்கிற சந்தேகம் உள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே பரமக்குடியின் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்த டாக்டர் சுந்தர்ராஜன் இந்த முறை சீட்டு கேட்டிருந்தார். அவருக்கு சீட்டு கிடைக்காததால் திமுகவில் இணைந்துள்ளார். இதபோல் கடந்த முறை இவரது வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போது தேர்தல் பணியாற்ற இன்னும் தயாராகவில்லை.
திமுக வேட்பாளர் முருகேசன் தற்போது தான் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். பரமக்குடி நகர்ப்பகுதியின் நீண்டநாள் பிரச்சனைகளான பாதாள சாக்கடைத் திட்டம் சுகாதாரப் பிரச்சனைகளை கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசு தீர்க்கவில்லை போன்ற பல்வேறு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவதாகவும், திமுகவினர் தேர்தல் அறிக்கைகளை மக்களிடம் வழங்கி வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. இந்த முறை பரமக்குடியைப் பொறுத்தவரை போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாகவே தெரிகிறது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக மாவட்டச் செயலாளரின் மனைவியும் அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளருமான கீர்த்திகா முனியசாமியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ முருகனும் போட்டியிடுகிறார்கள். இந்தப் பகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குலத்தினர், யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இஸ்லாமியர், நாடார், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தப் பகுதியில் மூன்று வேட்பாளர்களும் பிரபலமானவர்கள் தான். அதிமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிற சமுதாய வாக்குகளை கவர்கிறவர்களே வெற்றி பெற முடியும் என்பதால் இந்தமுறை போட்டி கடுமையாக இருக்கும் என்கிற நிலை இருந்தபோது யாதவர் சமூகத்தின் பிரபலமான கண்ணப்பனை திமுக களமிறக்கியிருக்கிறது. யாதவ மக்களுக்கு நன்கு அறிமுகமான கண்ணப்பன் கடந்த கால தேர்தலில் தனித்து, இரண்டு கட்சிகளுக்கும் மாறிமாறி சென்று வந்துள்ளதால் இந்த முறை அவ்வளவு எளிதாக யாதவர் வாக்குகள் இவருக்கு கிடைக்குமா என்கிற சந்தேகம் உள்ளது. பிற சமுதாயத்தினரின் வாக்குகளை கணிசமாக பெருபவரே இந்த முறை வெற்றி பெற முடியும். ஆகமொத்தம் கடந்த கால தேர்தல்களை விட இந்த முறை போட்டி கடுமையாகவே இருக்கும்.
இந்த தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற விரிவான செய்தி அடுத்த இதழில் பார்க்கலாம்.
– வெ.சங்கர்