வாக்கு கேட்க சென்ற அமைச்சர்… : எம்பியை பாட்டில் வீசி விரட்டிய அதிமுகவினர்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவின் வேட்பாளராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தான் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபரம் அருகே பெரியபட்டினத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஊருக்குள் சென்று கொண்டு இருந்தார். இவருடன் பாஜகவின் நிர்வாகிகளும், அதிமுக எம்பி அன்வர்ராஜா, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மணிகண்டன் ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது ஊர் பொதுமக்களும் அதிமுகவினரும் கூட்டமாக சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் அமைச்சர் மணிகண்டனையும், எம்.பி அன்வர்ராஜாவையும் பார்த்ததும் இவர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அருகில் கிடந்த பாட்டில்களை எடுத்து பிரச்சார வாகனத்தை நோக்கி வீசத் தொடங்கினர். அமைச்சர் மணிகண்டனும், எம்பி அன்வர்ராஜாவும் சுதாரித்து குனிந்து கொண்டதால் அவர்களுக்கு பின்னால் பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டிருந்த அவைத் தலைவர் உடையப்பத்தேவரின் தலையில் பாட்டில் பட்டு படுகாயமடைந்தார். உடனே சககட்சி தொண்டர்கள் அவரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
அதிமுகவின் அமைச்சரும், எம்பி அன்வர்ராஜாவும் சென்ற வாகனத்தின் மீதே தாக்குதல் நடந்துள்ளதால் அந்தப்பகுதியே பரபரப்பானது. இந்தப் பிரச்சனைக்கு என்னதான் காரணம் என்று நமது குழுவினர் பொதுமக்களிடமும், அதிமுகவினரிடமும் விசாரிக்கையில்.. கடந்த ஐந்தாண்டுகளாக இந்த மாவட்டத்தின் எம்பியாக இருந்த அன்வர் ராஜா மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையுமே கொண்டுவரவில்லை.
இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் அன்வர்ராஜா இஸ்லாமியராக இருந்து கெண்டு மதவாதக் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவளித்தார். இதுபோல எம்பி அன்வர் ராஜா மீது ஏராளமான குறைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர். அமைச்சர் மணிகண்டனை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக நாங்கள் தேர்வு செய்ததையே நாங்கள் செய்த பாவமாக கருதுகிறோம். நாங்கள் ஜெயலலிதாவுக்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தோம். இவர் இந்த மாவட்டத்தின் அமைச்சரானதில் இருந்து இந்த மாவட்டத்திற்கு ஏதாவது பயனுள்ள திட்டங்களையோ இளைஞர்கள் வேலையின்மையை போக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் ஏதாவது கொண்டு வந்திருக்கிறாரா? இவரால் இந்த மாவட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த பயனும் கிடையாது. மணிகண்டன் அமைச்சராக இருப்பதால் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயனடைகிறார்கள். அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் ஏதாவது கோரிக்கையுடன் செல்வபவர்களிடம் எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்கிறாராம்.
அமைச்சர் மணிகண்டனும், எம்.பி. அன்வர்ராஜாவும், நயினார் நாகேந்திரனுடன் வந்ததால் தான் இந்த பாட்டில் வீச்சு பிரச்சனையே நடந்திருக்கிறது. இவர்கள் இருவரும் எங்கள் பகுதிக்கு வாக்கு கேட்க வராமலல் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டும் தனியாக வந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் நடந்திருக்காது என்கிறார்கள்.
அமைச்சருக்கும், எம்பிக்கும் சொந்தக் கட்சிக்காரர்களே தங்களின் எதிர்ப்பை காட்டிய இந்தசம்பவத்தை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக திசை திருப்பி இந்து முஸ்லீம் பிரச்சனையை கிளப்ப பார்க்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிற்கலாம். வாக்கு சேகரிக்க வருவது அவர்களது கடமை. வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் எங்களது உரிமை. நாங்கள் அமைச்சர் மணிகண்டனையும், எம்பி அன்வர்ராஜாவையும் விரட்டியடிக்க விரும்பினோமே தவிர பாஜகவிற்கு எதிராக இந்த சம்பவம் நடைபெறவில்லை என்றனர்.