போதையில் போலீசாரை வம்பிழுத்த நபர்..!
ஈரோடு மாவட்டம் பவானியில் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடிபோதையில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவரை பார்த்து கேலி பேசிக்கொண்டு சென்றுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சக போக்குவரத்து போலீஸ் ஒருவர் பிரகாஷை, விசாரணைக்கு அழைத்தது தான் தாமதம், நடந்து வந்த தன்னிடம் சோதனையா என ஆவேசம் அடைந்து அவரை நா கூசும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்ட தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றி ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வருமாறு சவால் விட்டு அழைப்பு விடுத்தார் போதை அடிமை பிரகாஷ். பிரகாஷின் பிரசங்கத்தை மற்றொரு காவலர் செல்போனில் படம் பிடிக்க அவரையும் ஆபாசமாக பேசி ரவுண்டு கட்டினார் போதைமகன் பிரகாஷ்..! அந்த பகுதியினர் அடித்தும் அடங்க மறுத்த பிரகாஷை பிடிக்க சட்ட ஒழுங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களை கண்டவுடன் ஓடிச்சென்று பவானி ஆற்றுக்குள் குதித்து அங்கு நின்றபடியே போலீசாரை ஆபாசமாக திட்டினான் பிரகாஷ்.
விரட்டிச்சென்றால் ஆழமான பகுதிக்குள் சென்று போதையில் அவர் மூழ்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் போதை தெளிந்ததும் கவனித்துக் கொள்ளலாம் என்று போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தண்ணீரில் மூழ்கியதால் அடித்த தண்ணீர் மொத்தமும் இறங்கி கரை சேர்ந்த குடிமகன் பிரகாஷ், பேருந்து நிலையத்தில் வைத்து மழையில் நனைந்த கோழியாக போலீசிடம் வசமாக சிக்கினார். தான் குடிபோதையில் தன்னை அறியாமல் பேசி விட்டதாக ஒவ்வொரு போலீசாரிடமும் காலில் விழுந்து கதறும் நிலை ஏற்பட்டது.
போதையில் செய்த அலும்புக்கு கழிவறையில் வழுக்கி விழ வைத்துவிடுவார்களோ…! என்ற அச்சத்தில் தவித்த பிரகாஷை சிறப்பு கவனிப்புடன் சிறைக்கு அனுப்பி வைத்தனர் பவானி போலீசார்..!
போதையில் ஊருக்குள் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டால் காப்பாற்ற போலீசார் வருவது வழக்கம்.., அந்த போலீசாரிடமே வம்பிழுத்தால் பிரகாஷ் போல சிறைக்கு செல்ல நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!