விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருடம்தோறும் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அயோத்திதாசர், காயிதே மில்லத் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு அம்பேத்கர் சுடர் விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது வைகோவிற்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணன், அயோத்திதாசர் ஆதவன் பி.வி.கரியமான், காயிதேமில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது, செம்மொழி ஞாயிறு முனைவர் ராமசாமி ஆகியோருக்கு வழங்கினார்கள்.
இந்த விழாவில் திருமாவளவன் பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவோடு கருத்தியல் சார்ந்த, கொள்கை சார்ந்த உறவை பேணி பாதுகாத்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் சங்பரிவார் கும்பல் ஹரித்துவாரில் கூடி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசி சபதம் எடுத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் பெரியார், அண்ணாவின் பிள்ளையாகவும், கலைஞரின் வார்ப்பாகவும் தான் களத்தில் நிற்கிறார் என்பதற்குச் சான்றுதான் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அதற்கடுத்ததாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத்தான் தமிழ்நாட்டில் வேலை என ஆணை பிறப்பித்தது என கூறிக்கொண்டே செல்லலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து நின்றால்தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிலைப்பாடு. இனி வரவிருக்கிற 2024 ஆம் அண்டு பாராளுமன்றத் தேர்தலில் தப்பித்தவறி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. இது தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். ஆகையால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தகுதியும் தமிழக முதல்வருக்கு இருக்கிறது. நாட்டையும் அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து பேசுகிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தின் சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் மகத்துவத்தை உணர்ந்து பேசுகிறேன். பாரதிய ஜனதா கட்சியினர் ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிறார்கள். இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ்-ன் செயல்திட்டங்கள். தமிழ்நாட்டில் அதிமுகவை விட நாங்கள் தான் பெரிய கட்சி என காட்டிக் கொள்வதற்கு தினந்தோறும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் பிஜேபி அல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் துணை போய்விடக் கூடாது என்பது எனது தோழமையான வேண்டுகோள் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து அமர்ந்தார்.
அதன்பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்பேத்கர் விருதுக்கு என்னைத் தேர்வு செய்து என்னிடத்திலே நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார். அதற்கு சம்மதம் தெரிவித்து இந்த விழாவிலே நான் கலந்து கொண்டேன். திருமாவின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டவன் நான். அவர் பேசிய பேச்சுக்கும் கட்டுப்பட்டவன் தான். இதன்பிறகு எந்த விளக்கமும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற திருமாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக திருமாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் என்று ஸ்டாலின் பேசியதும் விழா அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.
– சூரிகா