ஓடும் லாரியில் கொள்ளை அடிக்கும் கும்பல்..!
ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து தார்ப்பாயை கிழித்து, ஜவுளி மற்றும் மஞ்சள் மூட்டைகளை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், லாரி உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலை திரைப்படத்தில் வருவது போல ஓடும் லாரியில் பாய்ந்து ஏறி தார்ப்பாயை கிழித்து, அதில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து கரூர், திண்டுக்கல் வழியாக ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வாடிக்கை. அந்த வகையில் கடந்த 20ந்தேதி சுதாகரன் என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஈரோட்டில் இருந்து ஜவுளி பண்டல்களை ஏற்றி தார்ப்பாயால் மூடி எடுத்துக் கொண்டு புறப்பட்டது.
லாரிகளில் களவாடும் கும்பல் அதிகமாக இருப்பதை அறிந்த சுதாகரன், வழியில் எங்கும் லாரியை நிறுத்த வேண்டாம் என்று ஓட்டுனருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஈரோட்டில் புறப்பட்ட இடத்தில் இருந்து வழியில் எங்கேயும் லாரியை நிறுத்தாத ஓட்டுனர், மதுரை திருநகர் சுங்கச்சாவடி அருகே டீ குடிக்க லாரியை நிறுத்தியுள்ளார்.
லாரியின் பின்புறம் சென்று அவர் பார்த்தபோது தார்பாய் கிழிந்து ஜவுளி பண்டல்கள் களவாடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் உரிமையாளர் சுதர்சன், சம்பவ இடத்திற்கு சென்று போலீசில் புகார் அளித்துள்ளார் போலீசார் புகாரை பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
இதையடுத்து லாரி கடந்து சென்ற சுங்கச்சாவடிகளில் ஒவ்வொன்றாக காமிரா காட்சிகளை சோதித்துள்ளார். அதிகாலை அரவக்குறிச்சி சுங்கசாவடியை கடக்கும் போது தார்பாய் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் வேடசந்தூரில் அரிசி ஆலை ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது தார்பாய் கிழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
எனவே, அரவக்குறிச்சிக்கும் வேடசந்தூருக்கும் இடையே தான் கொள்ளையர்கள் லாரியில் ஏறி ஜவுளி பண்டல்களை கீழே தூக்கிப் போட்டு களவாடிச்சென்றிருக்க வேண்டும் என்று கண்டறிந்த சுதாகரன், இது குறித்து வேடசந்தூர் போலீசில் புகார் அளிக்க அவர்கள் கொள்ளை போனது தாடிக்கொம்பு காவல் எல்லை என தட்டிக்கழித்துள்ளனர்.
தாடிக் கொம்பு காவல் நிலையத்திலோ, கொள்ளை போனதாகத் தெரியவந்தது வேடசந்தூரில் என்பதால் அங்கு தான் புகார் அளிக்க வேண்டும் என்று கூறியதால் செய்வதறியாது தவித்த சுதாகரன் தனது சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது தான், கடந்த தீபாவளிக்குப் பின்னர் இதுவரை 40 லாரிகளில் இது போன்று கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே போல மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் சரக்குகளும் இதே பாணியில் கடந்த ஒரு வருடமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும், எங்கிருந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள் என்பது தெரியாத காரணத்தால் போலீசார் புகாரை பெற மறுப்பதாகவும் கூறப்படுகின்றது. தங்கள் கட்டுப்பாட்டில் செல்லும் வாகனங்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்க வேண்டிய சுங்கம் வசூலிக்கும் நிறுவனங்களும், நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசாரும் இதனை ஒரு பிரச்சனையாகவே கண்டுகொள்வதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது..!
இதுவரை ஒட்டு மொத்தமாக 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் கொள்ளையர்கள் ஏறி இறங்குவதற்கு வசதியாக இருப்பதாகவும், சரக்கு லாரியின் பின்னால் லோடு ஆட்டோவில் வரும் கொள்ளையர்கள் பண்டல்களை அதில் ஏற்றிக் கொண்டு எளிதாக தப்பிவிடுவதாக கூறுகின்றனர்.
புகாரை பெற்றால் தானே விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையினரின் மெத்தனம், வரும்காலத்தில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளைக்கு காரணமாகி விடக்கூடாது என்று லாரி உரிமையாளர்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில், தற்போது நவீன வசதி கொண்ட பலவிதமான தானியங்கி காமிராக்கள் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், அதில் இரு காமிராக்களை சரக்கு லாரியில் பொருத்தி, கொள்ளையர்களை அடையாளம் காணும்,புத்திசாலித்தனமான நடவடிக்கை மேற்கொள்ள லாரி உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுறுத்தலாக உள்ளது.
–செந்தில்குமார்