கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய முன்னாள் கவுன்சிலர்!
கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை வைத்து கொலை முயற்சி நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், திமுக ஒன்றிய துணை செயலாளர் உட்பட 6 பேர் தலைமறைவாகியுள்ளதால்,வழக்குப் பதிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலாடி அருகே ஆப்பனூர் தெற்கு கொட்டகையைத் தேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் மருமகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக சார்பில் கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகவேல் என்பவரின் அண்ணன் மகனான திருநாவுக்கரசு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் சில நாட்களாக அதிமுகவைச் சேர்ந்த செந்தூர் பாண்டியனைக் கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் 2 முறை வந்துள்ளனர். அப்போது காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தனது வேலையைக் கடலாடியில் முடித்துவிட்டு செந்தூர் பாண்டியன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை திமுக ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகவேல் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்தது.
தொடர்ந்து செந்தூர பண்டியன் இரு சக்கர வாகனம் மீது அந்த கும்பல் வந்த வாகனம் மோதியது. இந்த தாக்குதலில், படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாகச் செந்தூர்பாண்டியன் உயிர் தப்பினார். படுகாயமடைந்த செந்தூர்பாண்டியனுக்கு கடலாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு செந்தூர் பாண்டியன் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவிதம் நிகழா வண்ணம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஸ் தலைமையில் கடலாடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.கார்த்தி