பொங்கல் விழா… : நடராசன் ஆசை நிறைவேறுமா?
சசிகலாவின் கணவர் ம.நடராசனால் தஞ்சாவூரில் நடத்தப்பட்டு வந்த பொங்கல் விழா, அவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. அவரின் முகமாகவும், உணர்வாகவும் பார்க்கப்பட்ட பொங்கல் விழாவை, வரும் ஆண்டில் சசிகலா நடத்தி, நடராசனின் பெரும் ஆசையை நிறைவேற்றிவைக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கியத் திருவிழா’ என்கிற பெயரில் சசிகலாவின் கணவர் நடராசன், பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம். ஆனால், நடராசன் மறைவுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொங்கல் விழா நடைபெறுவது இல்லை. இது, அவரது ஆதாரவாளர்கள் அனைவரையும் வருத்தமடையச் செய்திருப்பதுடன்,
சசிகலா இந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நடராசனைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களின் ஆசை மட்டுமல்ல, அவருடைய பெரும் ஆசையும் இதுதான்’ எனத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நடராசன் வட்டாரத்தில் பேசினோம், `தனது தந்தை மருதப்பா அறக்கட்டளை மற்றும் தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சசிகலாவின் கணவர் நடராசன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவை நடத்திவந்தார். தைப் பொங்கல் அன்று மாலையில் தொடங்கும் விழா, மூன்று நாள்கள் மாநாடு போல் நடைபெறுவது வழக்கம். அப்போது, தினமும் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு உணவு பரிமாறப்படும்.
யாரும் பசியோட இருக்கக்கூடாது. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும், இந்த அடுப்பு அணையாமல் சமைத்து, எல்லோரது பசியையும் ஆற்ற வேண்டும்’ என்பார்.
அதைப் பார்க்கும்போது, ஊரே கூடி பொங்கல் விழாவைக் கொண்டாடுவதுபோல் இருக்கும். அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் என உள்ளூர் பிரபலங்கள் மட்டுமல்லாமல், பல நாடுகளில் இருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள். நடராசன், உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பொங்கல் விழாவுக்கு ஊருக்கு வந்துவிடுவார். மேலும், அப்போதுதான் அரசியல் தொடர்பான தன் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார் நடராசன். இவர் பேசிய பேச்சுகள், தமிழக அரசியலில் பல சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பெரும் பொருட்செலவில் விழாவை நடத்துவார்.
ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, இதை நடத்துவதற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விழா நடக்குமா நடக்காதா என சந்தேகம் எழுந்தது. அப்போது அவர், நம்ம ஆட்சியிலேயே நமக்கு சிக்கல் ஏற்படுகிறது. என்ன நடந்தாலும் இந்த விழா மட்டும் தடைபடக்கூடாது’ என்றார்.அதன்படி, பல நெருக்கடிகளைச் சமாளித்து, அந்தச் சமயத்திலும் விழாவை நடத்தினார். அப்போது,
பொங்கல் விழாவை சிலர் தடை செய்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது. நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த விழா எப்போதும் சிறப்பாக நடக்கும். எனக்கு முன்னால் இருப்பவர்கள் இதைச் செய்வார்கள். அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாட்டையும் எனது தந்தை மருதப்பா அறக்கட்டளை சார்பில் செய்துவிட்டேன்’ என உருக்கமாகப் பேசினார்.
அத்துடன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த போதும், ‘விழா ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வரவில்லை என்றாலும் நீங்க எல்லாம் சேர்ந்து நடத்துங்க. அதுதான் எனக்கு உயிர்’ என உருகினார்.
அப்போது அருகில் இருந்தவர்கள், ‘நீங்க நல்லபடியாகத் திரும்பி வாங்க. விழாவை நாங்க பார்த்துக்கொள்கிறோம்’ என்றதும்தான் சமாதானம் ஆனார். நடராசன் இந்த தமிழர் விழாவைத் தன்னுடைய உணர்வாகவும் முகமாகவும் பார்த்தார்.
ஆனால், சிகிச்சையில் இருந்தபோதும், அவர் இறந்த பிறகும் இரண்டு வருடங்களாகப் பொங்கல் விழா நடைபெறவில்லை. அவருக்கு நெருக்கமான சிலர் எப்படியாவது விழாவை நடத்திவிட வேண்டும் என முயன்றனர். ஆனால், சில காரணங்களால் அவை நடைபெறாமல் போய்விட்டது.
சிறையில் இருக்கும் சசிகலா, தன் உறவினர்கள் மற்றும் நடராசனின் சகோதர்கள் மூலமாகப் பொங்கல் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், விழாவின் மூலம் நடராசன் வாழ்வார். அவருடைய பெரிய ஆசையும் இதுதான். எத்தனை சிரமங்கள் வந்தாலும் தடைகள் வந்தாலும், வரும் ஆண்டிலாவது பொங்கல் விழாவை சசிகலா நடத்தி, கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்” என்கின்றனர்.