ஆட்டம் காட்டும் நித்தியானந்தா… : அதிரடி உத்தரவு பிறப்பித்த உள்துறை அமைச்சகம்..!
பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து அழைத்து வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நித்தியோ சத் சங் என்ற பெயரில் சத்தமிட்டு வருகிறார்.
நித்திக்கு ஆதரவாக ஒரு நாளைக்கு மூன்று முறை குரல் கொடுத்து வரும் ஜனார்த்தன சர்மாவின் இரு மகள்களும் கடந்த 26 ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளிலுள்ள பார்படோஸ் தீவில் இருந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர். தங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பமில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வருகிற 16 ந் தேதிக்குள் இருவரும் எந்த நாட்டில் இருக்கிறார்களோ, அந்த நாட்டின் இந்தியத் தூதரகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைவாக முடிக்க உள்துறை உத்தரவிட்டிருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ஆசிரமத்தில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது தாயார் ஜான்சிராணி, தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் அளித்த புகார் விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் மனு அனுப்பினார். பாலியல் பலாத்கார வழக்கிலும் அவர் ஆஜராகாமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சென்னை பெண் ஒருவரும் உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சகத்தில் இருந்து கர்நாடக அரசின் தலைமை தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளர், பெங்களூரு ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டு உள்ளது.
அதன்படி நித்யானந்தா மீதான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பதை ஆராய்ந்து, நித்யானந்தாவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்யவும்.
முன்ஜாமீன் வழங்கப்பட்டிருக்க வில்லையென்றால் அவரை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வந்து அவர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை பிடிக்க சிபிஐ உதவியுடன் சர்வதேச காவல்துறைக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு நித்தியை தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நித்தி தன்னிடம் உள்ள கோடி கணக்கான ரூபாய் பணத்தை வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வழக்குகளை இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில் சத் சங் என்று சத்தமிட்ட ஆசாமி நித்தியானந்தாவின் ஆட்டத்தை உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு ஆட்டம் காண வைத்துள்ளது.
அதே நேரத்தில் எங்கோ பதுங்கி இருந்து பூச்சாண்டி காட்டும் நித்தியின் லீலைகளுக்கு எண்டு கார்டு போடப்படுமா ? என்பது கர்நாடக காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தெரியவரும்..!
- ராபர்ட் ராஜ்