கிராம சபைக் கூட்டங்களை கூட்டக்கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு மனு – : பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் , கடந்த அக்டோபர் 2ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள், கொரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன.
இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் படி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததால், தமிழக அரசு, கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதால் மூன்று வாரங்களில் கிராமசபை கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கிராம சபை கூட்டங்களை ரத்து செய்த உத்தரவை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிகளின்படி கிராம சபை கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்க கிராம சபை தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். அதேசமயம், நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிக்க பஞ்சாயத்துக்கள் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தனி மனித விலகல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்றால், டாஸ்மாக் கடைகளில் தனி மனித விலகல் பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.
கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்ய அதிகாரம் உள்ள நிலையில், குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
– நமது நிருபர்