மதுரவாயிலில் பிடிபட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி : குவியும் பல லட்ச ரூபாய் மோசடி புகார்கள்
விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 27) என்பவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என பல்வேறு இடங்களில் விசிட்டிங் கார்டை கொடுத்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் போலி ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்த சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் வெளியானது. இதுவரை அவர் மீது மோசடி சம்பந்தமான புகார்கள் ஏதும் வராத நிலையில், செய்திகள் வெளியானதை தொடர்ந்து மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு வந்த சிலர் கைது செய்யப்பட்ட சுபாஷ் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்திருப்பதாக புகாரளித்துள்ளனர். மேலும் இவரது கூட்டாளியான பாஸ்கர் என்பவர் இவருக்கு உதவி வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மேலும் பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் தொடர்பான புகார்கள் எந்த பகுதியில் நடந்ததோ அங்கு புகார் அளிக்குமாறு மதுரவாயல் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் சுபாஷ் பத்து லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானோர் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சுபாஷை நேரில் பார்த்ததில்லை என்றும், செல்போனில் மட்டுமே பேசியதாகவும் அவருக்கு முழுக்க முழுக்க பாஸ்கர் என்பவர் உறுதுணையாக இருந்து வந்ததாகவும் அந்த விசிட்டிங் கார்டை வைத்தே தற்போது மதுரவாயல் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களைப்போல் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷ் மீது ஏராளமான மோசடி புகார்கள் தற்போது குவிய தொடங்கி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.