தமிழகம்

புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு : விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

2018-19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகம் முழுவதும் சுமார் 6362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பயில்கின்றனர்.

RMSA திட்டத்தின்கீழ் தமிழகத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆய்வக பொருட்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு என மத்திய அரசு தொகையை ஒதுக்குகிறது.
ஆய்வு பொருட்களுக்கு என பள்ளி ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாயும், நூலகத்திற்கு புத்தகங்களை வாங்குவதற்கு என 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை. இந்த பொருட்களை வாங்குவதற்காக டெண்டர் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன.
இதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. முக்கிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆகவே தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2018-&19 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ஆய்வக பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

இனி வரும் கல்வியாண்டுகளில் ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். 2018-&19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்“ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு இந்த வழக்கை பொதுநல வழக்காக தொடர முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்துவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button