புரட்டி எடுத்த பெருமழை..! : தத்தளிக்கும் சேலம் மக்கள்!
தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
மேலும் அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த சூழலில் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேல் விடாமல் கொட்டித் தீர்த்ததில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சீலிநாயக்கன்பட்டி, அடிவாரம், வங்கி ஊழியர் காலணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மேலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீரை வெளியேற்றுவதற்கு வழி இல்லாததால், செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே மழை நீர் வெளியேற முடியாமல் நிற்கிறது. ஒருமணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. எங்கள் வீட்டிற்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இரவில் தூங்க முடியவில்லை.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அவர்கள் தண்ணீரை வெளியேற்ற முடியாது. கொசு, புழுக்கள் வராமல் இருக்க மீன்கள் கொண்டு வந்து விடுவதாக கூறினர். இதென்ன குளமா? இதேபோல் அருகிலுள்ள பகுதிகளிலும் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து விட்டது. சாலைகளிலும், வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பதிலளித்த சேலம் மாநகராட்சி அதிகாரிகள், தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வெளியேற முடியாத ஏராளமான இடங்கள் இருக்கின்றன. சேலம் மாநகராட்சியில் மட்டும் 13 இடங்கள் உள்ளன.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மின்மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநகராட்சி விரைவாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த சூழலில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் உடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்வோம். அதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இரண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் வருவதற்கு முன்பு, வெள்ளம் ஏற்படும் போது, ஏற்பட்ட பின்பு என மூன்று காலங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
- செந்தில்குமார்