தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனத்தால், கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை மற்றும் அபராதம் கட்டாமல் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் பாக்கி வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் ஒப்பந்தத்தை மீறி வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 540 சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 71 சுங்கசாவடிகள் அமைந்துள்ளன. 63 சுங்கச்சாவடிகளுடன் உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், 47 சுங்கசாவடிகளுடன் தமிழ்நாடு 3-வது இடத்திலும் உள்ளது.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் எந்த கிராமத்தில், என்ன பணி நடைபெற்றது, யார் ஊதியம் பெற்றார்கள் போன்ற அத்தனை விவரங்களையும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட இணையதளம் அன்றாடம் அப்டேட் செய்துவரும் நிலையில், தினமும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை சுங்கக் கட்டணமாக வாரிச் சுருட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்திலோ, 2016-ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை சுங்கசாவடிகள் ஆய்வு குறித்த எந்த தகவலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கசாவடிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பது கடந்த காலத்தில் நடந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுங்கக் கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் கறாராக வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் ஒப்பந்ததாரர்கள், விதிமுறை மீறலுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் அபராதத்தை செலுத்தாமல் இழுத்தடித்து வருவதும் அம்பலமாகியுள்ளது.
அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஆய்வில், திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்த மெப் (MEP) இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் என்ற ஒப்பந்ததாரரின் விதிமுறை மீறல் அறிக்கையாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2016 ஏப்ரல் மாத நிலவரப்படி மெப் இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் என்ற அந்த நிறுவனம், நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வாரந்தோறும் செலுத்த வேண்டிய கட்டண பாக்கி மற்றும் அபராதத் தொகையான 20 லட்சத்து 52 ஆயிரத்து 469 ரூபாயுடன் சேர்த்து மொத்தம் 6 கோடியே 68 லட்சத்து 39 ஆயிரத்து 358 ரூபாய் கட்டண பாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் பரனூர் சுங்கச்சாவடி மீது எந்த ஒரு புகாரும் இல்லை என்பது போல அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு சுங்கச்சாவடிகளுமே விதிமுறை மீறல்களின் மொத்த உருவமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உதாரணமாக தாம்பரம் முதல் திண்டிவனம் வரை 92 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க, இரு இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர். வேன் மற்றும் காரில் செல்வோருக்கு ஆத்தூர் சுங்கச்சாவடியில் 55 ரூபாய், பரனூரில் 60 ரூபாய் என மொத்தம் 115 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் நெடுஞ்சாலை ஆணையம், கிலோ மீட்டருக்கு 65 பைசா வீதம் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. அந்த கணக்கீட்டின் படி மொத்தம் உள்ள 92 கிலோ மீட்டருக்கும் சேர்த்தே 59 ரூபாய் 80 பைசா தான் வசூலிக்க வேண்டும்.
ஆனால் அதை விடுத்து ஒரு காருக்கு 55 ரூபாய் கூடுதலாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் தினமும் 95 ஆயிரத்து 290 வாகனங்கள் கடப்பதாக 2017 ஆண்டு கணக்கீடு தெரிவிக்கின்றது. அதன்படி பார்த்தால் நாள் ஒன்றுக்கு தோராயமாக 52 லட்சத்து 40 ஆயிரத்து 950 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், ஒப்பந்ததாரர்கள் சிறப்பாக கவனித்து விடுவதால் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இந்த கட்டண கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
மூன்று நிமிடங்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க நேரிட்டால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சட்டவிரோதமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு லூதியானாவை சேர்ந்த ஹரி ஓம் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் 2 நிமிடம் 50 வினாடிகள் சுங்கச்சாவடியில் காத்திருந்த நிலையில், தன்னிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது சரியா? என கேள்வி அனுப்பி இருந்த நிலையில், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய பதில் ஒன்றை தெரிவித்தது. அதில் சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.
சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளுக்கு தீரா தலைவலியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த விதி அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சுங்கக் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், தொழுப்பேடு ஆகிய 2 இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் காலை மாலை வேளையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையான ஒன்று. 3 நிமிடம் காத்திருந்தாலே கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருக்க 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து நத்தை போல ஊர்ந்து செல்லும் வாகனங்களை மறித்து விதியை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்று வாகனங்களில் உரசிக் கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில் பெயருக்குக் கூட சுங்கசாவடியில் போலீசார் எவரும் இல்லை. அதேபோல 3 கிலோ மீட்டர் தூரம் வரிசை கட்டி வாகன ஓட்டிகள் காத்திருந்த நிலையில், சுங்கக் கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டனர். விரைவாகச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையில், ஃபாஸ்ட் டேக் ஒட்டிய வாகனத்தில் வெளியூர் சென்று திரும்பிய வாகன உரிமையாளர்களும் மணிக் கணக்கில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர்.
எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத இந்த இரு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் மாதம்தோறும் கணிசமான தொகையை பெற்றுக் கொள்வதால், சுங்கச்சாவடி ஊழியர்களின் விதி மீறல் குறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்களை தாமாக முன்வந்து களைய வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரிகளோ, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கண்ணிருந்தும் குருடர்கள் போல மவுனம் காப்பதாக சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், சுங்கசாவடி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் தங்கள் உரிமையை கேட்டுப் பெற வேண்டும் என்றும், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் மீது மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறுகின்றனர். புதிதாக சாலை அமைத்து சுங்கம் வசூலிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் காலாவதியான பின்னர், அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். அப்போது சாலையை பராமரிக்க புதிதாக ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வாகன ஓட்டிகளிடம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. அதனையும் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவதில்லை.
தமிழகத்தின் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் முறையான வசதிகள் ஏதும் இருப்பதில்லை, பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எப்போது தூக்கத்தில் இருந்து விழிப்பார்கள் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக இருக்கின்றது.
- ராபர்ட்