இந்தியா

சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி : பெருநிறுவனங்களுக்கு விலக்கு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

அடுக்குமாடி குடியிருப்புகள், மருந்து உற்பத்தி ஆலைகள், ரசாயன ஆலைகள், சிமெண்ட், மருந்து, எண்ணெய் உற்பத்தி ஆலைகள், அனல்மின் மற்றும் அணுமின் நிலையங்கள், சாலைகள் போன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி அவசியம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி திட்டங்களுக்கு அனுமதி கோரும் நிறுவனங்களுக்கு திட்டத்தின் அமைவிடம் அத்திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு குறிப்பிட்ட அளவிலான தொகையை திட்ட அமைவிடத்தை சுற்றிய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக (Corporate Environment responsibility) நிதியை அரசிடம் வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவில் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கடந்த 2018 ஆண்டு இந்த Corporate Environment responsibility நிதியை முறைப்படுத்தி உத்தரவிட்டது. அதன்படி 100 கோடிக்கு குறைவான திட்டங்கள் மொத்த திட்ட மதிப்பீட்டில் 2 சதவீதமும், 100 கோடிக்கு மேல் 500 கோடிக்கு குறைவான திட்டங்கள் திட்ட மதிப்பீட்டில் 1.5 சதவீதமும், 500 கோடிக்கு மேல் 1000 கோடிக்கு குறைவான திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 1 சதவீதமும், 1,000 கோடிக்கு மேல் 10 ஆயிரம் கோடிக்கு குறைவான திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 0.50 சதவீதமும், 10 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 0.2 சதவீதமும், பணத்தை அரசிடம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பணமானது திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், கல்வி போன்றவற்றிற்காக அரசால் செலவிடப்படும். இந்த தொகையையும் தங்களால் செலுத்த முடியாது என்ற நிறுவனங்கள் சில டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே தற்போது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் இனிமேல் திட்ட செயல்பாட்டாளர்கள் யாரும் (Corporate environment responsibility) நிதியை அரசிற்கு செலுத்த வேண்டாம் எனவும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் மக்களுக்கு தேவையான திட்டங்களை நேரடியாகவும் உடனடியாக தங்களால் செய்ய முடியும் என்கிறார் கிரெடாய் அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன்.

2018ஆம் ஆண்டு உத்தரவில் Corporate Environment responsibility நிதியை திட்டம் செயல்படுத்தப்படும் இடத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை மேம்படுத்த மட்டுமே செலவிட வேண்டும். இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றிருந்தது.

ஆனால் தற்போதைய உத்தரவில் நிறுவனங்களே Corporate Environment responsibility நிதியை உருவாக்கி மேம்பாட்டு பணிகளை செய்யலாம் என்று மட்டுமே கூறியிருப்பதன் மூலம் நிறுவனங்கள் உண்மையாகவே மேம்பாட்டு பணிகளை செய்தார்களா என்று கண்காணிப்பது கடினம் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

மேலும் ஏற்கெனவே மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வரவுள்ள நிலையில் பல திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களே இல்லாத நிலை உருவாகவுள்ளது.அப்படியிருக்கையில் எப்படி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை அனுமதி பெறுவதில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரவுள்ள காலத்தில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதியையும் செலுத்த வேண்டாம் என்று அறிவித்திருப்பது நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மேலும் தீங்கையே விளைவிக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button