இந்தியா

வாகனங்களுக்கு நீண்டகால 3-ஆம் நபர் காப்பீடு கட்டாயம்

நாடெங்கிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனையாகும் பைக்குகள் மற்றும் கார்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அறிவித்துள்ளது.
பைக்குகளுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடும், கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடும் கட்டாயம் என்று ஐஆர்டிஏ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், நாடெங்கிலும் பைக்குகள் மற்றும் கார்களுக்கான விலை உயரும் எனத் தெரிகிறது.
மூன்றாம் நபர் காப்பீட்டை, புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், புதிய பைக்குகளுக்கு 5 ஆண்டுகளுக்கும் பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், ஐஆர்டிஏஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையையும் ஐஆர்டிஏ வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின்படி, புதிதாக அறிமுகம் செய்யப்படும் மூன்றாம் நபருக்கான நீண்டகால காப்பீடு திட்டத்தின்படி, காப்பீடு செய்யும் நபருக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
முதல் வாய்ப்பின்படி, கார் மற்றும் பைக்குகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சொந்த வாகன காப்பீட்டை 3 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பெறலாம். 2-ஆவது வாய்ப்பின்படி, கார் மற்றும் பைக்குகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கும், சொந்த வாகன காப்பீட்டை ஓராண்டுக்குமாக பெறலாம்.
1000 சிசி-க்கு குறைந்த திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ரூ.5,286-ஆக இருக்கும். இதுவே, 1000 முதல் 1500 சிசி திறன் கொண்ட கார்களுக்கான காப்பீடு ரூ.9,534-ஆகவும், 1500 மற்றும் அதற்கு அதிகமான சிசி-க்களை கொண்ட கார்களுக்கான காப்பீடு ரூ.24,305-ஆகவும் இருக்கும்.
இதுவே, 75 சிசி-க்களுக்கு குறைவான திறன் கொண்ட பைக்குகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ரூ.1,045-ஆக இருக்கும். அதுவே, 75 முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கான காப்பீடு ரூ.3,285-ஆகவும், 150 முதல் 350 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கான காப்பீடு ரூ.5,453-ஆகவும், 350 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட பைக்குகளுக்கான காப்பீடு ரூ.13,034-ஆகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button