மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது.
இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு – ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.
இந்தியாவில் இதற்கு முன்பாக இரு தேசிய கல்வி கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழக கல்வி ஆணையம், மேல்நிலைக் கல்வி ஆணையம் உள்பட பல்வேறு ஆணையங்களை மத்திய அரசு அமைத்தது. அதேபோல, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஒர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்.
14 வயது வரை கட்டாயக் கல்வி, ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது, சமஸ்திருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. வருவாயில் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கவும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
இதற்குப் பிறகு 1986ல் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்டார். கல்வி வாய்ப்புகளில் உள்ள பாரபட்சங்களை நீக்கி, அனைவருக்கும் சமவாய்ப்புள்ள கல்வி கிடைக்கச் செய்வதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டிருந்தது.
உதவித் தொகை விரிவாக்கம், வயதுவந்தோர் கல்வி, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் இந்தக் கல்விக் கொள்கை முன்வைத்தது. இந்த கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு நரசிம்மராவ் பிரதமரானபோது, 1986ஆம் ஆண்டின் கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு, 2005ல் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசு ஒரு கல்விக் கொள்கையை முன்வைத்தது.
இந்நிலையில்தான், 2014ல் பதவியேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதிய ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆனால், டிஎஸ்ஆர் சுப்பிரமணியத்திற்கும் அப்போதைய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால், 2016ல் அக்குழு முன்வைத்த வரைவு அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இதற்குப் பிறகு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுதான் தனது பரிந்துரையை தற்போது வெளியிட்டிருக்கிறது.
இந்த வரைவு அறிக்கையில் பின்வரும் சில அம்சங்கள்தான் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.
- குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயதுவரை என ஐந்து ஆண்டுகளாக இருக்கும் என இந்த வரைவு கூறுகிறது. பல வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் ஆரம்பக் கல்வியை 5 வயதில் துவங்கும்போது மூன்று வயதில் ஆரம்பக் கல்வியைத் துவங்குவது தேவையில்லாதது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
- கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன்வைக்கிறது. ஆனால், ஜாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துவதாக இந்த முறை அமைந்துவிடும் என்றும் இது கல்வி முறையை பின்னோக்கிச் செலுத்தும் என்றும் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
- எட்டாம் வகுப்போடு பொதுக் கல்வியை முடித்துவிட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தங்கள் எதிர்காலப் படிப்புக்கான பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது. 13 வயதில் எட்டாம் வகுப்பை முடிக்கும் ஒரு மாணவனால் எப்படி எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்க முடியும் என்றும் எட்டாம் வகுப்போடு படிப்பை முடிக்கவே இந்தத் திட்டம் ஊக்குவிக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
- மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறிவுத் தேர்வுகள் நடத்த வேண்டும்; இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும் என்கிறது இந்தக் கல்வி வரைவு.
அடுத்த வகுப்புகளுக்குச் செல்ல இந்தத் தேர்வின் முடிவுகள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என இப்போது கூறினாலும் விரைவிலேயே அது அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம், ஐந்தாம் வகுப்புகளிலேயே மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் போகலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள். - பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவை மூன்று விதமாகப் பிரிக்கப்படும். முதலாவது பல்கலைக்கழகம் கூடுதலாக ஆய்வுகளையும் குறைச்சலாக பாடப் பிரிவுகளையும் வழங்கும்.
இரண்டாவது பிரிவு கூடுதலான பாடப் பிரிவுகளையும் குறைச்சலான ஆய்வுகளையும் மேற்கொள்ளும். மூன்றாவது வகைப் பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டிருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அந்தந்த கல்லூரிகளே பட்டங்களை வழங்க அனுமதிக்கப்படும். ஆனால், பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கும்போது, இம்மாதிரியான ஒரு பரிந்துரையை கல்விக் கொள்கை முன்வைக்க முடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள். - National Testing Agency என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, எல்லா கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கும் என்கிறது வரைவு. ஆனால், இது பள்ளிக் கல்விக்கான மதிப்பைக் குலைத்து, கோச்சிங் சென்டர்களை அதிகரிக்க வழிவகுப்பதோடு, ஏழைகள் கல்வியே பெற முடியாத நிலையை ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள். மேலும் பள்ளிகளைவிட கோச்சிங் சென்டர்களுக்கே கூடுதலான முக்கியத்துவம் கிடைக்கும்.
- பிரதமரின் தலைமையில் தேசிய அளவிலான கல்வி அமைப்பாக ‘ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்‘ உருவாக்கப்படும் என்கிறது இந்த வரைவு. இந்தியா போன்ற பல இன மக்கள் பல்வேறு விதமான கலாச்சாரங்களுடன் வாழும் நாட்டில், எல்லா அதிகாரங்களையும் கொண்ட உயர் அதிகார அமைப்பை ஏற்க முடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
- பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கற்றுத் தரும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சமஸ்கிருத மொழி ஊக்குவிக்கப்படும் என்றும் புதிய வரைவு கூறுகிறது. இது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு கொள்கை என்கிறார்கள் கல்வியாளர்கள். மத்திய அரசு எல்லா மொழிகளையும் சமமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு கூடுதலாக செலவழிப்பது சரியா என்கிறார்கள் கல்வியாளர்கள்.
- தற்போது மருத்துவக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவின்படி, எம்பிபிஎஸ் முடித்தவர்கள், தேசிய அளவிலான வெளியேறும் தேர்வு (Exit Exam) ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் பெறும் மதிப்பெண்களை வைத்தே முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வுசெய்யலாம் என்கிறது இந்த வரைவு அறிக்கை. ஆனால், இது மருத்துவக் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் முழுமையாகப் பறிக்கும் செயல் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு பற்றி தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்று வருபவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ‘பொதுக் கல்விக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளரான இவர் புதிய கல்விக் கொள்கை மீது தன் விமர்சனங்களை பல தளங்களில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கல்வி குறித்த எல்லா முடிவுகளையும் மத்திய அரசே எடுக்கும் வகையில் உள்ள புதிய கல்விக் கொள்கை நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
1968 கல்விக் கொள்கையில் 10+2+3 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 12ஆம் வகுப்பை சில மாநிலங்கள் இன்டர்மீடியேட் வகுப்பு என கல்லூரிப் படிப்புடன் இணைத்தன. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பள்ளிப் படிப்புடன் இணைக்கப்பட்டது. அதுவும் இந்த முறை தமிழகத்தில் 1977-&78ம் ஆண்டில்தான் அறிமுகமானது. தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னிலை வகிக்கவும் இதுவே காரணமாக அமைந்தது. மாநிலங்களுக்கு உரிமை வழங்கியதால்தான் இது சாத்தியமானது எனவும் கூறியுள்ளார்.
கல்வித்துறை சார்ந்த எல்லா முடிவுகளையும் பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் அமைப்பே எடுக்கும். குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் பள்ளிகளில் இருக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவு அதை குறைக்கலாம் என்கிறது எனவும் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு, பதவி உயர்வு இரண்டில் இட ஒதுக்கீடு பற்றி பேசாதது, மூன்று வயது குழந்தைக்குத் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவது போன்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என நிராகரிக்கும் அவர், புதிய கல்விக் கொள்கை குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து குழந்தைகளை முற்றிலும் பிரித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியைப் புகுத்துவது இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது எனவும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எங்கும் சென்று படிக்கலாம், ஏழைப் பிள்ளைகள் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்றுதான் படிக்க வேண்டும் என்பது குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கும் எனவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு சாடியுள்ளார்.