புழல் ஜெயிலா? உல்லாச விடுதியா?
புழல் சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதுபோன்ற பொருட்களை சட்ட விரோதமாக ஜெயிலுக்குள் அதிகாரிகளே கடத்தி சென்று கொடுப்பதாகவும் புகார் எழுந்தது.
இதற்காக கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கைதிகளின் உறவினர்கள் புகார் கூறி இருந்தனர்.
இதேபோல கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதில் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிற பட்டியலும் வெளியாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. அதில், “சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.
சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், “உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.
அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் போடப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து கைதிகள் காணப்படுகிறார்கள். விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்துள்ளனர். டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் கைதிகள் சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர். செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் சிறை வளாகத்தில் “ஹாயாக” நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார். அந்த படமும் வெளியாகி இருக்கிறது.
இதேபோல அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
இதன் முடிவில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.