மழை நீரை சேமித்தால் வறட்சியை வெல்லலாம் : உதாரண கிராமங்கள்
தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் மழை நீரை முறையாக சேமித்து, வறட்சியை வென்று காட்டி உள்ளனர். மழை நீர் சேகரிப்பிற்கு முன்னோடியாக விளங்கும் கிராமங்கள் குறித்து பார்ப்போம்.
தமிழகத்தின் பல ஊர்களிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மட்டும் வறட்சியை வென்று காட்டி உள்ளன. பொதுவாகவே வறண்ட சூழலை கொண்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குள் அடங்கியவை மீனாட்சிபுரம், ராமசந்திராபுரம், முத்தையபுரம், மல்லீஸ்வரபுரம் ஆகிய கிராமங்கள், இந்த கிராமங்களில் வசிப்போர், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மழை நீர் சேகரிப்பை பல ஆண்டுகளாக தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் ராமசந்திராபுரத்தில் உள்ள ஊர் பொதுக்குளத்தை தூர்வாரி வைத்துள்ளனர். அந்த கண்மாய், களிமண் தளத்தை கொண்டது என்பதால், தேங்கும் நீர் மண்ணுக்குள் செல்லாமல் நீண்ட காலம் நிற்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஊர்களில் வறட்சியும்,குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டாலும் ராமசந்திரபுரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் மட்டும் தண்ணீருக்கு தட்டுபாடே இல்லை. பெய்யும் மழை நீரை முறையாக சேமித்தால், எந்த வறட்சியையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு அந்த கிராம மக்கள் முன்னுதாரணமாக உள்ளனர்.
இதே போல் சேலம் அருகே உள்ள நைனாம்பட்டி கிராமத்தில் மழை நீர் சேகரிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பொதுக்கிணறு பல ஆண்டுகளாக பயன்படுத்துவோர் இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அந்த ஊரில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் உள்ளூர் இளைஞர் சிலர் ஒன்று சேர்ந்து இளம்புயல் என்ற குழுவை உண்டாக்கி, அந்த கிணற்றை 20 அடிக்கு தூர் வாரி ஆழப்படுத்தினர். அதற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் மழை நீர் தேங்குவது வழக்கம். இதனை கருத்தில் கொண்ட இளைஞர் அழைப்பு, அந்த மைதானத்தில் இருந்து தூர்வாரப்பட்ட கிணறு வரை குழாய் பதித்தனர். இந்த நிலையில் பெய்த மழையால் மைதானத்தில் தேங்கிய தண்ணீர், குழாய் மூலம் கிணற்றில் வந்து கொட்டியது.
மழை நீரை சேகரிக்க இளைஞர்கள் குழு மேற்கொண்ட முயற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதால் கிராம மக்களின் தண்ணீர் தேவை தீர வழி பிறந்துள்ளது.
ஒரே நாளில் மட்டும் அந்த கிணற்றில் 5அடிக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. வான்மழை தரும் நீரை, வகையாக சேமித்தால், வறட்சியை வெல்ல முடியும் என்பதை இரு வேறு கிராம மக்கள் செயலில் நிரூபித்து உள்ளனர். இதே போல அனைத்து ஊர்களிலும் மழை நீரை சேகரித்தால், வறட்சியால் வாடும் நிலையில் இருந்து தமிழகம் தப்பிப் பிழைக்கும்.