ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு..? : தட்டிக்கேட்ட இளைஞர் படுகொலை
சாத்தூர் அருகே ஊர் கூட்டத்தில் ஊராட்சி தலைவராக ஒருசாரார் மட்டும் போட்டியிடுவதை தட்டிக்கேட்ட வங்கி மேலாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிமுக கிளைச்செயலாளர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி கிராமம். 600 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பாக அதிமுக கிளைச் செயலாளரான ராமசுப்பு என்பவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஒருசாராரை மட்டும் அழைத்து கூட்டத்தை நடத்திய ராமசுப்பு, தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தன்னிச்சையாக தெரிவித்ததாகவும், இதற்கு அப்பகுதியை சேர்ந்த வங்கி மேலாளர் சதீஷ்குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பினரையும் அழைக்காமல் முடிவு எடுக்க கூடாது என்றும், உங்களுக்கு நிதி வரவு செலவுகள் பற்றி என்ன தெரியும் என்று சதீஷ்குமார் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமார் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுக கிளைச்செயலாளர் ராமசுப்பு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, வருகிற 26ஆம் தேதி வரையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைவர் பதவிக்கு தன்னை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், அடியாட்களை வைத்து ராமசுப்பு மிரட்டி தாக்கியதால், சதிஷ்குமார் உயிரிழந்ததாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.