வேகமெடுத்த ஹைட்ரோகார்பன் பணிகள்! : தடைவிதித்த உயர்நீதிமன்றம்
விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல்துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஆழமற்ற கடற்பகுதியை உள்ளடக்கிய 1,794 ச.கி.மீ பரப்பில் 116 கிணறுகள் அமைப்பதற்கும் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஆழமற்ற கடற்பகுதியை உள்ளடக்கிய 2,574 சகிமீ பரப்பில் 158 கிணறுகள் அமைப்பதற்கும் சுற்றுச்சூழல் அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் இரண்டு விண்ணப்பங்களை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய சுற்றுச்சூழல்துறையிடம் அளித்திருந்தது.
நிலப்பகுதியில் சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர், வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன் பட்டனம், திண்டிவனம், வானூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமையவுள்ளன. பெரும்பாலான கிணறுகள் ஆழமற்ற கடற்பகுதியிலே அமையவுள்ளதால் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் கோரியிருந்தது.
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்றால் திட்டம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவானது இந்த திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகளை விண்ணப்பம் அளித்த நிறுவனத்திற்கு வழங்கும். அந்த ஆய்வு எல்லைகளின் அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
வேதாந்தா நிறுவனத்திற்கு 116 கிணறுகள் அமைக்க சுற்றுற்றுச்சூழல் அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை கடந்த 10ஆம் தேதியும், 158 கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியுள்ளது.
இந்த ஆய்வு எல்லைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து வேதாந்தா நிறுவனம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் விரைவில் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்துவிடும். இதனால் நாகப்பட்டினம், புதுச்சேரி பகுதி மீனவர்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் இதே பகுதிகளில் 67 கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராமநாதபுரம் -& தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கு மத்திய அரசு அளித்த அறிவிப்பாணையை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில் “தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள விவசாய நிலங்களில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காற்றாலை மற்றும் ரயில் பாதை அமைக்க நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கழக நிர்வாகிகள் கடந்த மே 6 ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துகுடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் எரியாவு குழாய் பதிக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தை கையகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், உள்ள பல பகுதிகளில் இந்தக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக பெட்ரோலியத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை இந்த அனுமதி பட்டியலில் இடம்பெறவில்லை.
சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெட்ரோலியத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.