அரசியல்தமிழகம்

காவிரி நீரை பெற்றுத்தருவதை விட 8 வழிச்சாலை திட்டத்தில் தான் முதல்வருக்கு ஆர்வம்: மு.க.ஸ்டாலின்

8வழிச் சாலைக்கு காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீரை பெற்றுத்தர காட்டவில்லை, 3 ஆயிரம் கோடி லாபம் கிட்டும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தில் முதல்வர் பழனிசாமி தீவிரம் காட்டுகிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கட்சி வேட்பாளரான திருநாவுக்கரசரை வெற்றிபெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தோழமை கட்சிகள் துணை நிற்க ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏற உழைக்க காத்திருக்கிறோம். முதலமைச்சர் பதவி கனவில் இருந்தவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்க காரணமே, திமுக தான். உறவுக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்படுவோம். பொய் பிரசாரம் செயது வென்றோம் என ஒரு குருவி கூட்டம் சொல்கிறது. அப்படியெனில், மோடி வெற்றி பெற்றது எப்படி?
37 எம்பிக்கள் கூனி குறுகி இருந்ததை போல நாங்கள் இருக்க மாட்டோம். நாடாளுமன்றம் கூடட்டும். எங்கள் செயல்பாடுகளை அங்கே பாருங்கள். அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 8 வருடமாக மேட்டூர் அணை திறப்பு இல்லை, ஜுன் 12ம்தேதி டெல்டா குறுவை சாகுபடிக்கு திறக்கவேண்டும். இதற்காக தமிழக முதல்வர் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களிடம் பேசினாரா? 8 வழிச்சாலைக்கு காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீரை பெற்றுத்தர காட்டவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் 3 ஆயிரம் கோடி இலாபம் கிட்டும் என்பதால் அதில் தீவிரம் காட்டுகிறார்.
சர்வாதிகார ஆட்சி, எடுபிடி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது. 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன் என்று முதல்வர் சொல்லிவிட்டு நானும் ஒரு விவசாயி என்று கூறுகிறார். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாததற்கு காரணம், தமிழகத்திற்கு அவர்கள் தொடர்ந்து செய்த துரோகங்கள் தான்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க முடியாத முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் பேரழிவு திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த இந்த மரண அடியிணை சட்டமன்றத் தேர்தலில் கொடுக்க வேண்டும். நீட்டுக்காக கடந்த ஆண்டு 2 பேர் உயிரிழந்தனர் இந்த ஆண்டு 3 பேர் உயிரிழந்தனர். நீட் தேர்வு தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.


“மாணவர்கள் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை,எளிய-தாழ்த்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை தகர்க்கும் வகையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “நீட்” தேர்வால் தோல்வி அடைந்து அவமானப்பட்டு, தற்கொலை செய்த மாணவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைப் பற்றி மாநில முதல்வர் எடப்பாடியும் கவலைப்படவில்லை-இந்திய பிரதமர் மோடியும் அலட்சியப் போக்குடன் இருந்து வருகிறார். இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழர்கள் எவரும் மருத்துவராக முடியாத பரிதாப நிலை உருவாக்கியுள்ளது. கலைஞர், 2009ம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது உருவாக்கப்பட்டது தான் கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். புகழ் பெற்ற நூலக அரங்கத்தை, கலைஞர் கட்டினார் என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திருமண அரங்கமாக்கி உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.


கட்சிக்கு அதிமுக என்று பெயர் வைத்துக் கொண்டு, அண்ணாவின் பெயரால் அமையப்பெற்ற – கலைஞர் அமைத்த பிரமாண்ட நூலகத்தை பராமரிப்பு சிறிதுமின்றி பாழடையச் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரித்து அனைத்து வசதிகளையும் செய்திட வேண்டும்.அடுத்து இந்தித்திணிப்பை அறிவித்த பாஜ அரசு, தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பைக் கண்டு, குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையைக் கண்டு இந்தித் திணிப்பை பின்வாங்கியது-. அதுவும் கலைஞர் பிறந்த நாளில்.மாணவர்களுக்குரிய இலவச பஸ்பாஸ் திட்டம், ஜெயலலிதா ஆட்சியிலும், இப்போதுள்ள எடப்பாடி ஆட்சியிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இதுவரை வழங்காமல் இந்த அரசு அவமானப்படுத்தி வருகிறது. இம்மாத இறுதிக்குள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு, இலவச பஸ் பாஸை அரசு வழங்க வேண்டும். அடுத்து, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகையை காவி வண்ணத்தில் அமைத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. யாருடையத் தூண்டுதலில் இந்த அக்கிரமம் நடைபெற்றது என்பதை, முதல்வரும், கல்வி அமைச்சரும் தெரிவிக்க வேண்டும்.
ஆகவே தமிழக மாணவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து, வாட்டி, வதக்கி, வன்கொடுமையாக வாழ்நாளையே கருகச் செய்திடும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக மாணவர் அணி மாபெரும் மாணவர் போராட்டத்தை கையில் எடுக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button