ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ15 லட்சத்திற்கு ஏலம் : வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் விசாரணை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பதில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி 50 லட்சத்துக்கும், ஊராட்சிமன்ற துணை தலைவர் பதவி 15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதை தொடர்ந்து தற்போது இது குறித்து விசாரணை நடத்துமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் சுமார் 1,900 வாக்குகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் என்பவர், தனக்கு தான் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என ஊர் மக்களிடம் கேட்டுள்ளார். அதையும் மீறி யாராவது போட்டியிட்டால், அவர்களை தாக்குவேன் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பதிவிக்கான ஏலம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்றது. அந்த ஏலத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுக-வை சேர்ந்த சக்திவேல் மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள், ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்த சக்திவேல் இந்த முறையும் பஞ்சாயத்து தலைவராக தொடர ஒருமனதாக தீர்மானம் செய்துள்ளனர். இதையடுத்து, ஏலத்தொகையை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த இருவருக்கும் அவகாசம் விடுக்கப்பட்டது.
ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல் இதுபோல் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவது சட்டவிரோதமானது என்று கண்டனம் எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பதவிகள் ஏலம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் விசாரிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் எனவும், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் ஆயிரத்து 500 வாக்குகள் உள்ளது. இங்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட தீர்மானித்து இருந்தனர். இந்த நிலையில் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி, ஊராட்சி பொது நிதிக்காக தலைவர் பதவியை ஏலம் விட்டு ஒருவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்குள்ள கோவிலில் நடைபெற்ற ஏலத்தில் 4 பெண் வேட்பாளர்களின் கணவர்கள் கலந்து கொண்டதில், ரூபாய் 2 லட்சத்தில் ஏலம் துவங்கி, சித்ரா ராமச்சந்திரன் என்பவர் பெயரில் ரூபாய் 15 லட்சத்தில் முடிவடைந்ததாகவும், அவரையே ஒருமனதாக தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- முத்துப்பாண்டி