24 மணி நேரமும் மது விற்பனை சீரழியும் இளைய சமுதாயம்..!
கோவை மாவட்டத்தில் சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக என்று கூறி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருந்த அரசு மதுக்கடைகளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றி 3 மணி நேரம் குறைத்தார்கள். ஆனால் பெயரளவுக்குத்தான் 3 மணி நேரம் கடைகள் மூடியிருக்கின்றனவே தவிர சூலூர் பகுதி முழுவதும் 24 மணி நேரமும் அரசு மதுக்கடைகளில் போலியான மதுபானமும் விற்கப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் குடும்பப் பெண்களே மது விற்பனை செய்கிறார்கள்.
இப்பகுதி இளைஞர்கள் பலர் இளம் வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இளைய சமுதாயத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் மதுவிலக்கு காவல்துறையினர் தங்களுக்குத் தேவையான பணத்தை மாமூலாகப் பெற்றுக் கொண்டு மதுவிற்பனை செய்து சமூகச் சீரழிவுக்கு காரணமாக இருப்பது வேதனையிலும் வேதனை. கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்து குடியால் சீரழியம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் காத்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்.
– சாகுல் ஹமீது