Featuredஅரசியல்தமிழகம்தமிழகம்

சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது – ஜெயலலிதாவின் உதவியாளர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். அவர், தியாகத்தலைவி என்று சசிகலாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க முயலுங்கள் என்று குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெயிட்டுள்ளார்.

பூங்குன்றன் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர். கட்சி மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் பூங்குன்றனுக்கு தனி இடம் உண்டு என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பூங்குன்றன் அரசியல் செயல்களில் இருந்து விலகி விவசாயம், ஆன்மிகம் மற்றும் சமையல் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சசிகலா பயன்படுத்தும் தியாகத் தலைவி பட்டம் தேவையா என்பது குறித்து பூங்குன்றன் முகநூலில் பதிவு ஒன்றை வெயிட்டுள்ளார்.
அதில், பெயரில் ஒரு உந்து சக்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன். தொடர்ந்து அழைக்கும் போது சக்தி பிறக்கிறது. அதை நானும் உணர்ந்திருக்கிறேன். போயஸ் கார்டனில் வேலை பார்த்த போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை இனிஷியலோடு தான் எல்லோரும் அழைப்பார்கள். ஓ என்பது ஆச்சரியம். அதனால் தான் அவருக்கு உயர்வு கிடைத்திருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லும்போது ஆச்சரியமாக பார்த்தேனே தவிர பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

பிறகு காலம் பாடத்தை எனக்கு போதித்த போது அதில் உண்மை இருப்பதாக உள்ளம் உணர்ந்தது. ஏனென்றால் எத்தனை பெயரை நாம் இனிஷியலோடு அழைக்கிறோம் எண்ணிப்பாருங்கள். மிகக் குறைவு. ஒருவரின் பெயரை மட்டும்தான் நாம் அழைக்கிறோம். இன்றைய முதல்வரை தளபதி என்றுதான் அழைத்து வந்தார்கள். அதனால் தான் அவர் இதற்கு முன்பு வரை தளபதியாகவே இருந்துவிட்டார்.


செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகும் தளபதி என்றே பலரும் அழைத்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் பழனியில் தலைவர் என்பதை நடைமுறைப்படுத்த சொல்லுங்கள். அதுவே வெற்றியைத் தரும். தளபதி என்பதன் அர்த்தம் அரசனுக்கு அடுத்து அதாவது தளபதி அவ்வளவுதான். அரசன் ஆவது எப்போது! நான் நண்பரிடம் தெரிவித்த கருத்தை அவருக்கு தெரிந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தாரா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மனதில் தோன்றிய நல்லதை சொல்ல வேண்டும். அதுவே அறம்.

சமீபத்தில் இளையவர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு மலர்ந்தது. இளையவராக இருந்தாலும் நடக்கும் எதார்த்தத்தை புரிந்து கொண்டவராகத்தான் தெரிந்தார். அதைவிட உண்மையை சொல்லும், ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது. என்ன நடக்கப் போகிறது என்பது அவரது உள்ளத்திற்கும் தெரிந்திருந்தது! சூழ்நிலையே அனைத்திற்கும் அடிப்படை. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் இடத்தில் இருந்தால் தான் இன்றைய அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள்.

இருபக்கமும் பேசி நாடகமாடுபவர்களைத்தான் தலைவர்களும் விரும்புகிறார்கள். வசைபாடியவர்களை வரவேற்கும் உள்ளம், நலன் கருதி ஒதுங்கி போகிறவர்களை மதிக்கத் தவறுகிறது. புரிந்துகொள்ள மறுக்கிறது. பதவியும், பணமும் இல்லையேல் இன்றைக்கு அரசியல் செய்ய முடியாது. காலம் கனியும் வரை காத்திருக்க பழக வேண்டும் என்று எனது அரசியல் அனுபவத்தை அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். சூழல் சரியாக வேண்டும் அல்லது சூழலை சரியாக்க வேண்டும். சூழலை மாற்ற முனைவதே விவேகம் என்றார் அந்த இளைஞர்.

சூழல் மாறினாலே சுபிட்சங்கள் வந்துவிடும் என்றேன் நான். அவரின் பேச்சிலிருந்து அவரை புரிந்துகொண்ட நான் அவரிடம் ஒன்றைச் சொன்னேன். தியாகத்தலைவி என்று சின்னம்மாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். தியாகத்தின் அர்த்தம் என்ன? தியாகியாக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? விரும்புகிறீர்களா? வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க முயலுங்கள் என்றேன். இந்த அடைமொழி அவர்கள் விரும்பும் சிறப்பைத் தராது என்பதே எனது புரிதல்.

முடிவு என்பது காலத்தின் கையில் உள்ளது. முடிவு சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. உதவும் எண்ணம் இருந்தாலும் காலம் அனுமதிக்க வேண்டும். கடவுள் அதற்கு வழிவிட வேண்டும். திக்கற்றவருக்கு தெய்வமே துணையல்லவா! நல்லது நடக்க வேண்டி இறையிடம் முறையிடுகிறேன்.”இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button