பெற்றோரை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியினர் தங்கள் இரண்டு மகன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொடுத்த 5 ஏக்கர் சொத்துப் பத்திரம் மற்றும் பட்டா பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்-2007-ன் கீழ் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர்களிடம் பட்டா மாற்றம் செய்யப்பபட்டு 26.11.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தம் கிராமத்தில் வசித்து வரும்கண்ணன் மற்றும் அவரது மனைவி பூங்காவனம் அம்மாள் ஆகியோர் கடந்த 19.11.2018 அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது இரண்டு மகன்களும் பழனி, செல்வம் ஆகியோர் தங்களை முற்றிலும் பராமரிப்பதில்லை எனவும், எதிர்காலத்தில் நன்கு பராமரிப்பார்கள் என்ற எண்ணத்தில் தாங்கள் சுயமாக சம்மபாதித்து சேர்த்த 5 ஏக்கர் பரப்புள்ள நிலங்களை மகன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி கொடுத்தோம். ஆனால் எங்கள் மகன்கள் எங்களை எந்தவித்திலும் பராமரிக்கவில்லை, சாப்பாடு, துணி என எந்த உதவிகளும் செய்யாமல் எங்களை முற்றிலும் பராமரிக்க தவறவிட்டதோடு மட்டுமல்லாமல், இளைய மகன் அடித்து துன்புறுத்துவதாகவும், தங்களது சொத்துக்களை பிள்ளைகளிடமிருந்து பெற்றுத் தருமாறும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரை அழைத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்-2007-ன் கீழ் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். இச்சட்டத்தின் கீழ் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடமிருந்து சொத்துக்களின் உரிமையை பெற்றவர்கள் வயதான பெற்றோரை வாழ்நாள் முழுவதும் கைவிடாமல் பாதுகாத்து, பராமரித்து வருவதற்கு கடமைப்பட்டவர்கள். மேற்கண்ட பழனி மற்றும் செல்வம் தங்களது வயதான பெற்றோர்களை பராமரிக்க தவறிய காரணத்தால் மேற்கண்ட சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை உட்கோட்ட நிர்வாக தீர்ப்பாயத்தில் உரியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்திரவிட்டதன் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ல் முதல் வகுப்பு நிர்வாக நடுவருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கண்ணன் மற்றும் பூங்காவனம் அளித்த மனுவின் பேரில் விசாரணைகள் மேற்கொண்டு தானமாக எழுதி வழங்கப்பட்ட நிலச் சொத்துக்கள் குறித்த உரிமை மாற்றத்தை ரத்து செய்தும், மீண்டும் அந்த சொத்துக்களுக்கு உரிமையை மனுதாரர்கள் பெற்றிடவும் உட்கோட்ட தீர்ப்பாயத்தில் உத்திரவிடப்பட்டதன் தொடர்ச்சியாக, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், சொத்து ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மனுதாரர்களிடம் மீண்டும் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் 26.11.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணனிடம் 2.12 ஏக்கர் நிலத்திற்கும், பூங்காவனத்திடம் 2.85 ஏக்கர் நிலத்திற்கும் உண்டான பெயர் மாற்றப்பட்ட பட்டாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ‘கடந்த 19.6.2018 அன்று கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியனர் தங்கள் பிள்ளைகள் சரியாக பராமரிக்காமல் துன்புறுத்துவதாகவும், தாங்கள் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களில் ஒரு பகுதியை தங்களுக்கு பெற்று தருமாறும் கோரிக்கை மனு அளித்தார்கள். இவர்களது மூத்த மகன் பழனி அரசு வேலையில் உள்ளார், இளைய மகன் செல்வம் வீடு கட்டுமான வேலைகளை செய்து வருகிறார். இந்த தம்பதியனர் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் சுயமாக சம்பாத்தித்த 5 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள். அதன் பின்பு மகன்கள் இருவரும் பெற்றோர்களுக்கு உணவு வழங்கமாலும், பராமரிக்காமலும் உள்ளார்கள். இந்த நிலையில் கண்ணன், பூங்காவனம் பசியும், பட்டினியுமாக மன உளைச்சலுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள். பிள்ளைகளுக்கு 5 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, தங்களது சாப்பாட்டிற்காக கையேந்தும் நிலைக்கு கண்ணன், பூங்காவனம் தள்ளப்பட்டனர்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்-2007-ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திவிடப்பட்டது. இதில் இளைய மகன் தந்தையை மிகவும் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் கண்ணன் வீட்டிற்கு வருவதற்கே பயந்து சாலை ஓரம், தெருக்களில் பல நாட்கள் படுத்துள்ளார். இந்த நிலையில் இவர்களது மூத்த மகன் ஜீவனாம்சம் தருவதாக கூறியுள்ளார், ஆனால் கண்ணன் எங்களுடைய நிலைத்தை பெற்றுத்தந்தால் போதும் அதை வைத்து கொண்டு எங்கள் வாழ்க்கையை பார்த்து கொள்வோம் என்றார். இந்த வயதிலும் கண்ணன் தன்னம்பிக்கையுடன் பேசியதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எண்ணிடம் மனு அளித்த போது கூட இரண்டு மகன்களுக்கு எழுதிக் கொடுத்த நிலத்திலிருந்து தலா 60 செண்ட் கொடுத்தால் போதும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டு வாழ்கிறோம் என்றார் கண்ணன். இதனை கருத்தில் கொண்டு மொத்த இடத்திற்கான பட்டா, சிட்டா, அனுபவம் கண்ணன் பெயரில் 2.12 ஏக்கர், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை கவணிக்காத பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிள்ளைகள் மூலம் தொடர்ந்து உடல் ரீதியான துன்புறுத்தல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
தம்பதியினர் கண்ணன் மற்றும் பூங்காவனம் தெரிவிக்கையில் ‘பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நலன் கருதி நாங்கள் சுயமாக சம்பாதித்த நிலத்தை இரண்டு மகன்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு எழுதிக் கொடுத்தோம். ஆனால் நிலம் கிடைத்தவுடன் எங்களுக்கு உணவு, உடை என எதுவும் அளிக்காமல் எங்களை துன்புறுத்தினார்கள். இதனால் மனமுடைந்து மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களிடம் மனு அளித்தோம். இன்று எங்களுக்கு நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 7 வருடங்களாக சாப்பாடு கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வந்தோம்’ என்றார்கள்.
-முஸ்தாக் அகமது